கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.
கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது.
இளைஞனைச் சுட்டுக் கொன்றதை எதிர்த்து கொரோனா வேகமாகப் பரவுவதையும் பொருட்படுத்தாது, அரசின் கட்டுப்பாடுகளையும் அலட்சியம் செய்து பேரணிகள் நடத்தித் தங்கள் அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள்.
பேரணிகளில் அடிக்கடி அமைதி குலைந்து போராட்டம் செய்பவர்களும், பொலீசாரும் மோதிக்கொள்கிறார்கள்.கண்ணீர்ப் புகையால் பொலீசார் ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கலைக்க முயல்கிறார்கள். பல பொலீசார் காயமடைந்திருக்கிறார்கள், பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்.
பிரதமர் எடி ராமா எதிர்க்கட்சிகள்தான் போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். லஞ்ச ஊழல்கள் பெருமளவில் பரவியிருப்பதால் நீண்டகாலமாகவே அல்பானிய மக்கள் கோபமடைந்திருக்கிறார்கள். சகல வழிகளிலும் அரசு மோசமாக நடந்து வருவதாக உணர்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அதனால் திருப்தியடையாத மக்கள் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு நாட்டின் பொலீஸ் மாஅதிபரும் பதவியை விட்டு விலகவேண்டுமென்று கோரிவருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்