சுமார் 20 விகிதமான இஸ்ரேலியர்களே கொரோனாத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளத் தயார்!
இஸ்ராயேல் மக்களிடையே பொதுவாக கொரோனாத் தடுப்பு மருந்து பற்றிய நம்பிக்கையீனம் நிலவுவதாக மீண்டும் ஒரு பல்கலைக்கழகக் கணிப்பீடு தெரிவிக்கிறது. ஐந்திலொரு பங்குக்கும் குறைவான இஸ்ரேலியர்களே தாம் தடுப்பு மருந்தை உடனடியாகப் பெற்றுக்கொள்வோம் என்று தெரிவிக்கிறார்கள்.
27.3% விகிதமான யூத ஆண்களும் 22.8% அராபிய ஆண்களும் தாம் தடுப்பு மருந்தை எடுப்போம் என்று சொல்ல பெண்களில் 13.6% யூதர்களும் 12.2% அராபர்களும் அதைப் பெற்றுகொள்ளத் தயார் என்கிறார்கள்.
7.7 % யூத ஆண்களும் 29.4% அராபிய ஆண்களும், 17.2% யூதப் பெண்களும் 41.2% அராபியப் பெண்களும் தாம் தடுப்பு மருந்தை எடுக்க உறுதியாக மறுப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
கணிப்பீட்டை நடாத்திய ஹைபா பல்கலைக்கழகப் பேராசிரியர் “ஒட்டு மொத்தமாக இஸ்ராயேலியர்களிடையே இந்தத் தடுப்பு மருந்து பற்றிப் பெரும் அவநம்பிக்கை நிலவுகிறது. அரபியர்களுக்கும், பெண்களுக்கும் அதீத அவநம்பிக்கையாக இருக்கிறது,” என்று சுட்டிக் காட்டுகிறார்.
இந்த நிலைமையை நீக்க மருந்து நிறுவனங்கள் தமது மருந்தின் விபரங்களை வெளியிடவேண்டும், இல்லையேல் விரைவில் எமது நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கவிருக்கும் மருந்தின் பலன் எதிர்பார்க்குமளவுக்கு இருக்காது, என்கிறார் அந்தப் பேராசிரியர்.
கடந்த மாதங்களில் குறைவாக இருந்த தொற்றுக்கள் மீண்டும் அதிகமாகி வருகின்றன. தினசரி சுமார் 2,500 பேர் தொற்றுக்குள்ளாகிவருவதாக அரசு அறிவிக்கிறது. தடுப்பு மருந்தின் மீதான அவநம்பிக்கையை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவைகளில் ஒன்றாக முதல் கட்டத்தில் நாட்டின் முக்கியஸ்தர்களும், பிரபலங்களும் பகிரங்க நிகழ்ச்சிகளில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்