சீனாவின் வர்த்தப் போரால் தாக்கப்பட்டுவரும் ஆஸ்ரேலியாவுக்கு உதவத் தயார் என்கிறார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர்.
நீண்டகாலமாக ஆஸ்ரேலியாவின் பக்கத்து நாடாக மட்டுமன்றி முக்கிய வர்த்தகக் கூட்டாளியுமாக இருந்த சீனா இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ஆஸ்ரேலியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்தியோ, இறக்குமதி வரியால் தாக்கியோ வருகிறது. அவர்களுக்கிடையே உறைந்துபோயிருக்கும் உறவைப் பேச்சுவார்த்தைகளால் இளக்கிவைக்கத் தயார் என்கிறார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனானியா மஹூத்தா.
ஆஸ்ரேலியாவின் பொருட்களில் 30 விகிதமானவை சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. திராட்சை ரசம், தானியங்கள் போன்றவைகளை இறக்குமதி செய்வதற்கான வரிகளை அதிகரித்த சீனா மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சில வகை இறால் போன்றவைகளின் இறக்குமதியையும் நிறுத்திவிட்டது.
புதியதொரு அறிவிப்பாக ஆஸ்ரேலியாவின் நிலக்கரியையும் இறக்குமதி செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. அதன் மூலம் ஆஸ்ரேலியாவின் 14 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியின் கழுத்தும் நெருக்கப்படுகிறது.
“ஆஸ்ரேலியாவும் சீனாவும் நேரடியாகச் சந்திக்க வைப்பதன் மூலம் அவர்கள் தாம் இதுவரை கவனம் செலுத்தாக விடயங்களைப் பற்றிப் பேசி ஒரு சுமுகமான சூழலை உண்டாக்க என்னால் முடியும்,” என்கிறார் நனானியா மஹூத்தா.
சீனாவுக்கெதிரான வர்த்தக, அரசியல் நடவடிக்கைகளில் டிரம்ப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளில் இறங்கியதிலிருந்து ஆஸ்ரேலியா – சீனாவுக்கிடையே காட்டமான வார்த்தைப் பரிமாறல்களும் நடவடிக்கைகளுமே நடந்தேறிவருகின்றன. சீனாவின் நிலக்கரி இறக்குமதித் தடை நடவடிக்கைகைச் சர்வதேச வர்த்தக ஒன்றியம் முன்பாக எடுத்துச் செல்லப்பபோவதாக ஆஸ்ரேலியா குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்