இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!
நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரச பிரதிநிதிகள் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளெதுவுக்கும் போராட்டக்காரர்கள் இறங்கி வரவில்லை.
விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புக்களிடையே இப்போராட்டம் பற்றிய நோக்கு ஒருமுகமானதல்ல என்றாலும் போராட்டத்தில் இறங்கியிருப்பவர்களின் மீதே சர்வதேசக் கவனம் விழுந்திருக்கிறது. சில விவசாயிகள் சங்கங்கள் அரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதால் இன்னொரு சாரார் கொதித்துப் போயிருக்கின்றனர். பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபடுபவர்கள் செப்டெம்பர் மாதம் அரசு கொண்டுவந்த புதிய விவசாயிகள் சட்டங்களை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மிக முக்கிய விவசாய மாநிலமான பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். 1960 களில் இந்திய அரசு அக்காலத்துக்குரியதாக நவீனப்படுத்திய விவசாய முறைகள் பெரும்பாலும் பஞ்சாப்பிலேயே நடந்தன. அங்குள்ள நிலங்களில் புதிய பயிர்வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுவாகவே விவசாயிகளுக்கான பல சலுகைகளையும் [வங்கிக் கடன், மான்யம், இலவச மின்சாரம், தானியங்களை உயர்ந்த விலையில் கொள்வனவு செய்யும் உறுதிமொழி] அரசு அறிமுகப்படுத்தியது. மொத்தத்தில் அன்று ஏற்படுத்தப்பட்ட சட்டங்களால் அதிக இலாபமடைந்தவர்கள் பஞ்சாபிய விவசாயிகளே என்று குறிப்பிடப்படுகிறது. ஒப்பீட்டளவில் பஞ்சாபிய விவசாயிகள் இந்தியாவின் சராசரி விவசாயிகளை விட மிக அதிக வருமானமுள்ளவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகளின் அதிருப்தியான நிலைமையும், போராட்டமும் ஒரு புதிய விடயமல்ல. சுதந்திரம் கிடைத்து சுமார் முக்கால் நூற்றாண்டாகியும் ஐம்பது விகிதத்துக்கு அதிகமானவர்களை விவசாயிகளைக் கொண்ட நாடாக இருப்பது இந்தியாவுக்கே ஒரு அதிருப்தியான நிலைமைதான். பெரும்பாலான விவசாயிகள் இன்னும் நூற்றாண்டு முன்னைய விவசாய வழிகளையே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய பா.ஜ.க அரசின் காலத்தில் மட்டுமன்றி முன்னைய காங்கிரஸ் ஆட்சியிலும் விவசாயிகளின் நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தது. அதை இந்திய விவசாயத்தின் வளர்ச்சி தேங்கிக்கொண்டே இருந்தது என்றுதான் குறிப்பிடவேண்டும். அதிக விவசாய நிலத்தைப் பாவித்தாலும் விளைச்சலோ, வருமானமோ அதிகரிக்கவில்லை மட்டுமன்றி இந்தியாவின் தேவைக்கேற்ற உணவுத்தன்னிறைவை இந்திய விவசாயத்துறையால் கொடுக்க முடியவில்லை.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாகப் பேசப்படுவது “தானியங்களைக் கொள்வனவு செய்வது, அதன் விலையை முன்கூட்டியே நிர்ணயித்து அவ்விலையில் வாங்குவதாக உறுதி கொடுத்தல்” ஆகிய அரசு இதுவரை விவசாயிகளுக்குக் கொடுத்துவந்த உறுதியை மாற்றி விவசாயிகள் தாம் விரும்பியவர்களிடம் தமது விளைச்சலைச் சந்தை விலைக்கு விற்கலாம் என்று தீர்மானித்ததாகும். அத்துடன் அப்படியான தனியார் கொள்வனவுக்கான உதவிகளை அந்தந்த மாநில அரசுகளே செய்யும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஆணையிடும் என்றும் அரசு குறிப்பிட்டிருக்கிறது.
‘இந்த வழியில் அரசு இடைத்தரகர்களுக்கே வழிவிடுகிறது, இதனால் இடைத்தரகர்கள், வெளிநாட்டு வியாபாரிகள் இந்திய விவசாயிகளை அடிமாட்டு விலைக்கு விளைச்சலை விற்கத் தூண்டுவார்கள்’ என்று போராடும் விவசாயிகள் கோபமாக இருக்கிறார்கள். “உங்கள் விளைச்சலின் விலையையும் அதை யாருக்கு விற்பதென்ற தீர்மானத்தையும் நீங்களே செய்வது உங்களுக்கு நல்லது. எவரும் உங்கள் கைகளைக் கட்டிப்போட முடியாது,” என்றெல்லாம் சொல்வதைப் போராடுபவர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.
போராடும் விவசாயிகளில் தினசரி ஒருவராவது மரணமடைகிறார், போராட்டம் நடக்கும் இடங்களில் தினசரி வாழ்வுக்கு இடைஞ்சல் உண்டாகிறது. பா.ஜ.க அரசின் பக்கத்திலிருந்து வரும் அறிக்கைகளிலிருந்து அவர்கள் தங்கள் அடிப்படைத் தீர்மானங்களிலிருந்து மாறப்போவதில்லையென்று தான் ஊகிக்க முடிகிறது.
இன்னும் எத்தனை நாட்களுக்கு விவசாயிகள் தாக்குப் பிடிப்பார்கள் எனபதைவிட இப்போராட்டத்தை மேலும் எத்தனை நாட்கள் டெல்லிவாசிகள் சகிப்பார்கள் என்பது முக்கிய கேள்வி!
சாள்ஸ் ஜெ. போமன்