இந்தியாவின் கொவிட் 19 மருந்துப் பரிசீலனைகள் தாமதமாகிவருகின்றன.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி [AIIMS ]அமைப்பின் ஒத்துழைப்புடன் கொவிட் 19 ஐ தடுக்கக் கண்டுபிடித்த Covaxin என்ற மருந்தும் மூன்றாவது கட்டப் பரிசீலனையில் மனிதர்கள் மீது பிரயோகித்துப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்தப் பரிசீலனைகள் திட்டமிட்டபடி நடக்காததால் அந்த மருந்தின் வெற்றியும், விநியோகமும் பற்றி எதுவும் சொல்லமுடியாதிருக்கிறது என்று அறிவிக்கிறார்கள்.
அந்த மருந்துப் பரிசீலனைக்குத் தலைமை தாங்கும் டாக்டர் சஞ்சய் ராய் முதலாவது கட்டத்தில் 4,500 பேர் பங்கெடுத்ததாகவும் இரண்டாவது கட்டத்தில் 4,000 பேர் பங்கெடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். மூன்றாவது கட்டப் பரிசோதனைகளுக்குத் தேவையான 1,500-2,000 பேரில் தங்களுக்கு 200 பேர் மட்டுமே இதுவரை கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதற்கான காரணம் தடுப்பு மருந்துகள் எதுவுமே இல்லாமலிருந்த சமயத்திலிருந்த ஆர்வம் இப்போது இல்லாததே என்கிறார் டாக்டர் ராய். “தடுப்பு மருந்துகள் தான் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாயிற்றே, நாம் எதற்காக மேலும் இப்பரிசீலனைகளில் ஈடுபடவேண்டும்,” என்ற எண்ணமே அதன் காரணம் என்கிறார் அவர்.
நிலைமையை மாற்றுவதற்காக அந்தத் தடுப்பு மருந்தின் வெற்றியைப் பற்றிப் புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியம், எல்லோருக்கும் மருந்துகள் கிடைக்கவேண்டியதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வு உண்டாக்கும் நடவடிக்கையில் தாம் இறங்கியிருப்பதாக அவர் கூறினார்.
தடுப்பு மருந்தின் வெற்றியைப் பற்றி குறிப்பிடுகையில் அது நல்ல விளைவைத் தருவதாகவும், பாவனைக்குப் பாதுகாப்பு உறுதி தருவதாகவும் சொல்கிறார் டாக்டர் ராய். ஏற்கனவே இந்தியப் பாவனைக்கு அவசர அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட அஸ்ரா – ஸெனகாவின் தடுப்பு மருந்துடன் இதையும் பாவிக்கும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இவ்விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்