“கொப்ரா” என்றழைக்கப்படும் அவசரகால நிலை ஆராயும் குழுவைக் கூட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்
பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சனியன்று பேட்டியொன்றில் தெரிவித்த “கொரோனாத்தொற்றுப் பரவல் நிலை எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்ற விசனமான செய்தியும் “புதிய ரக கொரோனாக் கிருமியொன்றின் அதிவேக பரவல்” செய்தியும் சேர்ந்து பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பிரிட்டனுடனான விமானத் தொடர்புகளை வெட்டிக்கொள்ள வைத்தன.
அது போதாதென்று பிரான்ஸ் தரைப்போக்குவரத்தையும் துண்டித்துவிட்டது. பிரிட்டனின் பக்கமிருக்கும் டோவர் துறைமுகமும் தொற்றுப்பரவலைத் தடுப்பதற்காகத் தற்காலிகமாக மூடியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
எனவே பிரிட்டனின் மிகப்பெரும் பிரச்சினையாக எழுந்திருக்கிறது, நாளாந்த உணவுப் பொருட்கள் கொள்வனவு. அதுவும் நத்தார் புதுவருடத்துக்கான உணவுப்பொருட்களின் நிலைமை பற்றிய கவலை எழுந்திருக்கிறது. இந்தப் பெருநாள் சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் துறைமுகமான கலேயிலிருந்து பிரிட்டனின் டோவருக்கு நாளாந்தம் 10,000 பாரவண்டிகள் பொருட்களுடன் செல்வது வழக்கம்.
பிரிட்டனின் உணவுத்துறைத் திணைக்களம் நத்தார் புதுவருடக்கால தினசரி உணவுப் பிரச்சினை எழாமலிருக்க பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்குமான பாரவண்டிகள், கப்பல்கள் போக்குவரத்தை உடனடியாக அனுமதிக்கும்படி பிரிட்டனின் பிரதமர் பிரான்ஸுடன் கேட்டுக்கொள்ளவேண்டுமென்று விண்ணப்பித்திருக்கின்றன.
பிரிட்டனைத் தவிர, நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி, ஆஸ்ரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் இதுவரை இல்லாத புதிய ரக கொரோனாக் கிருமிகள் காணப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் இடையிலான ஈரோஸ்டார் ரயில் தொடர்புகளும் ஸ்தம்பித்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்