டிசம்பர் 27 ம் திகதி சுவீடன் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கிறது.
நாட்டு மக்களெல்லாருக்கும் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும், அவை நாட்டின் வயது வந்தவர்கள் எல்லோருக்கும் கோடை 2021 க்கு முன்னர் கொடுக்கப்படுமென்றும் சுவீடன் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் இன்று அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை ஆராய்ந்து அனுமதிக்கும் அமைப்பு pfizer biotech நிறுவனத்தின் தடுப்பு மருந்தை ஏற்றுக்கொண்டாயிற்று. அதன் அடுத்தபடியாக சுவீடன் 10,000 மருந்துகளைப் பெறவிருக்கிறது. அதையடுத்து வாராவாரம் 80,000 மருந்துகள் சுவீடனுக்கு வரவிருக்கின்றன.
முதலாவது கட்டமாக முதியவர்களுக்கும், பலவீனர்களுக்கும், மருத்துவ சேவையிலிருப்பவர்களுக்கும் மருந்துகள் கொடுக்கப்படும். முதல் கட்ட மருந்துகளை அடுத்து ஜனவரி மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளவிருக்கும் moderna நிறுவனத்தின் தடுப்பும் சுவீடனுக்குக் கிடைக்கவிருக்கிறது. அதையடுத்து ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் மற்றைய நிறுவனங்களின் மருந்துகளும் கொள்வனவு செய்யப்படும்.
ஐரோப்பிய ஒன்றியம் மொத்தமாக 300 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. அந்த மருந்துகளின் ஆராய்ச்சிகள் ஆரம்பித்த கட்டத்திலேயே இதுவரை வெளியிடப்படாத தொகையை முன்பணமாகவும் செலுத்தியிருக்கிறறது.
சாள்ஸ் ஜெ. போமன்