பொஸ்னியாவில் அகதிகள் மையமொன்றுக்குத் தீவைக்கப்பட்டு அழிந்தது.
பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் அகதிகள் தங்கியிருந்த முகாமொன்று அங்கே வாழ்ந்த சிலரால் தீவைக்கப்பட்டதாகப் பொலீஸ் தெரிவிக்கிறது. விபரங்களை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அங்கே தங்கியிருந்த சுமார் 1,500 அகதிகள் பக்கத்திலிருக்கும் இடிபாடுகளிலும், வீதிகளிலும் குளிரில் தங்கவேண்டிய நிலைமை உருவாகியிருப்பதாகவும் தெரிகிறது.
தனியாகச் சுமார் 1,400 ஆண்கள் தங்கியிருந்த அந்த அகதிகள் முகாம் மோசமான நிலையிலிருந்ததால் அங்கிருப்பவர்களை வெளியேறவைக்கும் சந்தர்ப்பத்திலேயே அங்கே வாழ்ந்த சிலர் அதற்குத் தீவைத்தார்கள். தீ உண்டாகும்போது அங்கிருந்த சுமார் 700 பேர் ஏற்கனவே வெளியேறியிருந்தார்கள். தீயணைப்புப் படையினர் வந்து அதை அணைக்க முன்னரே பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்துவிட்டன.
கிரவேசியாவின் எல்லையில் பீகாச் நகரையடுத்திருக்கும் அந்த அகதிகள் முகாம் கோடைகாலத்தில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்டது. மின்சாரம், நீர், மற்றும் சுகாதார வசதிகள் மோசமாக இருப்பினும் அதற்குள் இரண்டு மடங்கு அதிகமானவர்கள் தங்க ஆரம்பித்தார்கள். அதன் மோசமான நிலை கண்டு அங்கிருப்பவர்களை வெளியேறும்படி அரசும், ஐ.நா-வின் அகதிகள் அமைப்பினரும் கேட்டுக்கொண்டனர்.
ஐரோப்பாவின் மற்றைய பாகங்களுக்குப் போவதற்குத் திட்டமிட்டு வந்து, எல்லைகள் மூடப்பட்டதால் அப்பிராந்தியத்தில் சுமார் 3,000 பேர் விருப்பமின்றித் தங்கிவருகிறார்கள். அவர்களுக்கான தங்கும் வசதிகளெதையும் பொஸ்னிய அரசு செய்துகொடுக்கவில்லை. தற்போதைய நிலையில் அவர்களுக்குத் தங்க வேறு இடங்களில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்