தென்னாபிரிக்காவிலிருந்து விமான சேவைகளை நிறுத்துகிறது பிரிட்டன்.
பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் கொரோனாக் கிருமிகள் தமது நாடுகளுக்குள் வராமலிருக்கப் பல உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்திக்கொள்ளும் அதேசமயம் தென்னாபிரிக்காவின் விமான சேவைகளை அதே காரணத்துக்காக நிறுத்துகிறது பிரிட்டன். தென்னாபிரிக்காவில் பரவுவதாகக் குறிப்பிடப்பட்ட மேலுமொரு திரிபடைந்த கிருமிவகைகள் பிரிட்டனிலும் காணப்பட்டிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட வெவ்வேறுவகையில் திரிபடைந்த கொரோனா கிருமிகளை கடந்த சில மாதங்களாகவே இந்த நாடுகள் கவனித்திருக்கின்றன என்றாலும் அவைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதாலேயே பல நாடுகளும் திகிலடைந்து நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் தென்னாபிரிக்கவிலிருந்து பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை பிரிட்டன் அதிகாரிகள் தேடித் தனிமைப்படுத்தி வருகிறார்கள். அதே போன்ற நடவடிக்கைகளை பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு உலக நாடுகள் பலவும் எடுத்து வருகின்றன.
திகிலடைந்து அவசர நடவடிக்கைகள் எடுக்காமல் நிதானமான நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் அறிவுரை செய்கின்றன. அதற்குச் செவிமடுத்து பிரான்ஸ் உட்படச் சில நாடுகள் பிரிட்டனுக்கான எல்லைகளை மீண்டும் திறந்திருக்கின்றன. ஆனால், பிரிட்டனிலிருந்து வருபவர்களைக் கொரோனாப் பரிசீலனை செய்துகொள்ளும்படியும், ஒரு வாரமாவது தனிமைப்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.
ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகமான அளவு கொரோனாத் தொற்றுக்களையும் இறப்புகளையும் சந்தித்திருக்கும் நாடு தென்னாபிரிக்கா ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்