பிரிட்டன் – பிரான்ஸ் எல்லையில் ஒரு வாரத்துக்குமேல் மாட்டிக்கொண்ட பாரவண்டிச் சாரதிகள்.
பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து பிரான்ஸ் தனது நாட்டுக்குள் பிரிட்டரை அனுமதிக்க மறுத்ததால் டோவர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாரவண்டிச் சாரதிகள் ஒரு வாரத்துக்கும் மேல் மாட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய நிலை பற்றிச் சில நாட்களாக அரசியல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
எந்தப் பக்கமும் போகமுடியாமல் மாட்டிக்கொண்ட சாரதிகள் தங்களது பாரவண்டிகளுக்குள்ளேயே தமது நாட்களைச் செலவழிக்க வேண்டியதாயிற்று. மாற்றுடை, உணவு, உறைவிடமெதுவும் அவர்களுக்குக் கிடைக்காததால் பெரும் கஷ்டப்பட்டார்கள்.
பிரான்ஸ் – பிரிட்டிஷ் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசீலிக்கப்பட்ட பின்னர் சாரதிகளை உள்ளே விடப் பிரான்ஸ் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வாரத்துக்கும் அதிகமாக மாட்டிக்கொண்ட சாரதிகளிடையே கோபமும், பொறுமையின்மையின்மையும் ஏற்பட்டிருக்கிறது.
அவர்களால் துறைமுகத்தில் பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க பிரிட்டனின் இராணுவமும், மருத்துவ சேவையாளர்களும் அங்கே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஆயிரம் இராணுவத்தினர் சாரதிகளிடையே ஒழுங்கைப் பாதுகாத்து அவர்களுக்கான கொரோனா பரீட்சைகளை நடாத்த உதவியபின், தொற்று இல்லாதவர்கள் பிரான்ஸுக்குப் போகும் பாரவண்டிக் கப்பல்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்