பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?

மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது.

பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர்.

பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்குள்ள வெளிநாட்டவர்கள் மத்தியில் காணப்படுகிறது. பிரஜா உரிமை கோரும் ஒருவரது தொழில் நேர வரம்பு மாதம் ஒன்றுக்கு 151 மணித்தியாலங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற சட்டவிதி நடைமுறையில் உள்ளது.

பொதுவாக ஓய்வு ஒளிச்சல் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்யும் வெளிநாட்டவர்கள் பலரும் இந்த வேலைநேர வரம்புக் கட்டுப்பாட்டினால் பிரஜா உரிமை கோருகின்ற தகுதியை இழந்திருக்கின்றனர். இரவு பகலாக வேலை செய்வதை நிரூபிக்கும் ஆவணங்களுடன் விண்ணப்பித்த பல தமிழர்களது கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

வெளி நாட்டவர்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வத்தைப் பாதிக்கின்ற இந்த விவகாரம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி விமர்சனங்களைச் சந்திப்பது உண்டு.மிகையான வேலை நேரம் காரணமாக நிராகரிக்கப்பட்டிருந்த ஒருவரது பிரஜா உரிமை விண்ணப்பத்தை சாதகமாகப் பரிசீலிக்கப்போவதாக பிரான்ஸ் குடி உரிமை அமைச்சர் மார்லின் ஷியாப்பா (Marlène Schiappa) கடந்த வாரம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வைரஸ் நெருக்கடி காலத்தில் முன்னரங்குகளில் பணி புரிந்த காரணத்தாலேயே அல்ஜீரியப் பிரஜை ஒருவரது விண்ணப்பம் மீளப் பரிசீலிக்கப்பட வாய்ப்புக் கிட்டி உள்ளது. காவலாளியாகப் பணிபுரியும் 36 வயதுடைய மொஹமெட் என்ற அல்ஜீரியப் பிரஜை ஒருவரது நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தையே மீளப் பரிசீலிக்குமாறு குடியுரிமை அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளி நாட்டவர்களது குடியுரிமை விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலனை செய்து அவர்களுக்கு குடி உரிமை வழங்கும் விசேட திட்டத்தின்படியே மொஹமெட்டின் விண்ணப்பத்தை மீளப் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 13 ஆண்டுகளாக பிரான்ஸில் காவலாளியாக (security agent) தொழில் புரிந்துவரும் மொஹமெட் நிரந்தர,(CDI), தற்காலிக (CDD) வேலை ஒப்பந்தங்களில் மிக அதிக மணித்தியாலங்கள் பணி புரிந்த காரணத்தினால் அவரது குடியுரிமை விண்ணப்பம் 2018 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக தனது சட்டத்தரணி மூலம் அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.”அதிகம் வேலை செய்வது எனது விருப்பம். அதற்காக அரசுக்கு செலுத்தவேண்டிய வருமான வரிகள் அனைத்தையும் முறைப்படி கட்டுகின்றேன். அதனால் யாருக்கு என்ன பாதிப்பு?” என்று கேள்வி எழுப்புகிறார் மொஹமெட்…

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *