ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?
தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கத்தார் “தீவிரவாதிகளுக்கு உதவுகிறது” என்ற குற்றச்சாட்டுடன் அந்த நாட்டை ஒதுக்கி வைத்துச் சுமார் வருடங்களாகின்றன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் விளைவுகளால் ஏற்பட்ட சர்வதேச அரசியல் காலநிலை மாற்றத்தைக் கையாளும் நோக்கத்தில் அந்தப் பிளவை நிரவிவிட விரும்புகிறார்கள் சவூதி அரேபியாவின் அணியிலிருக்கும் மற்ற நாடுகள்.
ஜனாதிபதி டிரம்ப்பைப் போலன்றி சவூதி அரேபியாவிடம் கடுமையாக நடந்துகொள்ளவிருக்கும் ஜோ பைடன் அரசை நேரிடவே இத்தகைய அரசியல் மாற்றம் அரபு நாடுகளுக்கு அவசியமாகியிருக்கிறது. டிரம்ப்பின் அரசு கிழித்தெறிந்துவிட்ட ஈரானுடனான அணு ஆயுதப் ஆராய்ச்சிக் கட்டுபாட்டு ஒப்பந்தத்தை ஜோ பைடன் அரசு மீண்டும் புதுப்பிக்கச் சாட்டுகளைக் கொடுக்கலாகாது என்று அரபு நாடுகள் தெளிவாக இருக்கின்றன. அவ்வொப்பந்தம் மீண்டும் உயிர்பெறுமானால் ஈரானுக்கு உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் சந்தர்ப்பம் உண்டாகி அவர்கள் பலம் தங்களுக்கு நிகரானதாகிவிடுமென்று அராபிய நாடுகள் கணிக்கின்றன.
கத்தாருடன் சமாதானப் பேச்சுவார்த்துகளில் தரகராக ஈடுபடும் குவெய்த், அமெரிக்கா நாடுகளிடம் “இரண்டு பாகங்களுக்கும் சம கௌரவத்தை” தராத சமாதானமெதையும் தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கத்தார் தெளிவாகச் சொல்லி வருகிறது.
எகிப்திய இஸ்லாமிய அமைப்பான “[அல் இக்வான் அல் முஸ்லிமின்] இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன்” உறவுகளை அறுத்துக்கொள்ளவேண்டும், அல் கைதா, லெபனானின் ஹிஸ்புல்லா, ஐ. எஸ் ஆகிய அமைப்புக்களைத் தீவிரவாதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களிடம் தொடர்புகளை அறுத்துக்கொள்ள வேண்டும், கத்தாரிலிருக்கும் துருக்கிய இராணுவத் தளத்தை மூடவேண்டும் மற்றும் அல் ஜஸீரா ஊடகத்தை மூடவேண்டும் என்பவை அரபு நாடுகளின் முக்கிய கோரிக்கைகளாக 2017 லிருந்தே இருந்து வருகின்றன.
2014 இல் சவூதி அரேபியாவுடன் கத்தார் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி அரபு நாடுகளெல்லாம் தமது பொருளாதார, அரசியல் தொடர்புகளை ஒன்றுபடுத்திக்கொண்டு ஈரானுடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ளவேண்டும் என்பதே சவூதி உட்பட்ட நாடுகளின் குறிக்கோளாகும்.
ஒரு வாரத்துக்கு முன்னர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டியொன்றில் சவூதி அரேபிய அரசகுடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் “கத்தாருடனான நல்லிணக்க ஒப்பந்தத்தை உண்டாக்கிக்கொள்ளும் சாத்தியம் நெருங்கி வருகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி ஐந்தாம் திகதி அல் உளாவில் நடைபெறவிருக்கும் சவூதிய அரசரால் கூட்டப்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தில் இம்முறை கத்தார் மீண்டும் கலந்துகொள்ளலாம் என்றும் அச்சமயம் இந்த ஆறு நாடுகளுக்குள்ளேயான ஒப்பந்தமொன்று வெளியிடப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்