மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.
தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டதால் திண்டாடுகிறார்கள்.
அந்த நிலைமையைக் கையாள பல அமெரிக்கத் திணைக்களங்களுக்கும், வேலையிழந்தவர்களுக்கும், வேறு அமைப்புக்களுக்குமாக 900 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவித்திட்டம் ரிபப்ளிகன் + டெமொகிரடிக் கட்சி ஆட்சியாளர்களாலும், டிரம்பின் உதவியாளர்களாலும் உருவாக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அத்தொகையில் வேலையற்றவரகளுக்குக் கொடுக்கப்படும் தொகை போதாதென்று காரணம் காட்டிக் கையெழுத்துவைக்க மறுத்திருந்தார் டிரம்ப்.
ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறாத அந்த உதவித்திட்டம் சில நாட்களாகவே அதனால் இழுபறியிலிருந்தது. அது அங்கீகாரப்படுத்தப்படாத பட்சத்தில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வருவாயிழப்பது மட்டுமன்றி, நாட்டின் பல அரச திணைக்களங்களும் அன்றாடச் செலவுக்கு வழியில்லாமல் மூடவேண்டிய நிலைமையிலிருந்தது.
தனது அதிகாரத்தைக் காண்பிக்கவும், தனது ஜனாதிபதித் தோல்விக்குப் பழிவாங்கும் படலமாகவும் டிரம்ப் வேண்டுமென்றே தனது உதவியாளர்களினால் போடப்பட்ட திட்டத்தில் கையெழுத்திட மறுத்து வருவதை அவரது சொந்தக் கட்சிக்காரர்கள் பலரும் விமர்சித்து வந்தார்கள். பல மறுப்புக்களுக்குப் பின்னர் மனம் மாறி அந்த உதவித்திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் டிரம்ப்.
சாள்ஸ் ஜெ. போமன்