“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.
பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran இவ்வாறு கூறியிருக்கிறார்.”
மணிக்கு ஒரு தடவை நிலைமையை மதிப்பிட்டு வருகின்றோம். நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக கட்டுப்பாடுகளை எந்நேரமும் அமுல் செய்ய ஆயத்தமாகவே இருக்கிறோம். ஆனால் அவற்றைத் தீர்மானித்துவிட்டோம் என்று அது அர்த்தமாகாது” – என்றும் அமைச்சர் பத்திரிகைச் செவ்வி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை சுகாதார பாதுகாப்புச்சபை யின் கூட்டத்தை அரசு இன்று செவ்வாய்க்கிழமை கூட்டுகிறது. வீடுகளில் இருந்தவாறு தொழில் புரிவது (Télétravail) உட்பட அமுலில் உள்ள பல சுகாதாரக் கட்டுப்பாடுகளை ஜனவரி ஏழாம் திகதிக்குப்பின் முற்றாக நீக்கமுடியும் என்று அரசு எதிர்பார்த்துள்ளது.
ஆனால் புத்தாண்டில் வைரஸின் மூன்றாவது பரவல் சாத்தியம் என்பதை மருத்துவ அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸின் மாற்றமடைந்த திரிபு ஏற்கனவே நாட்டுக்குள் ஒருவருக்குத் தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளதால் அடுத்துவரும் வாரங்களில் அந்த புதிய வைரஸின் வேகமான பரவலை எதிர்பார்க்க முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
சமீப நாட்களாக தொற்றாளர்களது தொகை சராசரி 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்துவருகிறது. நத்தார் மற்றும் புதுவருட காலப்பகுதியில் பரவலாக வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கே வாய்ப்பு இருப்பதால் ஜனவரியில் அரசு எதிர்பார்ப்பது போன்று நாளாந்த தொற்று ஐயாயிரத்துக்கு குறைந்த எண்ணிக்கையை எட்டிவிடும் என்ற நம்பிக்கை அருகி வருகிறது.
எனவே நாடளாவிய ரீதியில் மூன்றாவது பொது முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்கவேண்டிய அவசர நிலை புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் பின்னர் உருவாகலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.