கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள்.
இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது.
இந்தக் கடுமையான வருடத்திலும் ஸ்லோவேனியாவுக்கு உலகளவில் புகழ்சேர்த்துக் கொடுத்தார்கள் இரண்டு மிதிவண்டிப் போட்டி வீரர்கள். டூர் டி பிரான்ஸ் என்ற சர்வதேச கௌரவம் மிக்க போட்டியில் முதலாவது, இரண்டாவது இடத்தைக் கைப்பற்றினார்கள் ஸ்லோவேனியர்களான Tadej Pogačar , Primož Roglič ஆகியோர். முதலிடத்தைப் பெற்றவரோ தனது 22 வயதில் அதை வென்று அப்போட்டியில் இதுவரை காலமும் வென்றவர்களில் இளையவரென்ற பெயரைப் பெற்றதுமன்றி மலைப்பகுதிப் போட்டிகள் மூன்று உட்பட சகலவிதமான போட்டிகளிலும் வென்று மொத்தப் பந்தயத்துக்குமான கேடயத்தையும் வென்று அப்படியொரு சாதனையைச் செய்தவர்களில் முதலாமவர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார்.
அதிலிருந்து ஸ்லோவேனியர்கள் இந்த இருண்ட காலத்துக்கான வெளிச்சத்தை எப்படிக் காணவேண்டுமென்று வித்தியாசமானச் சிந்தித்ததில் பிறந்தது தமது வீட்டு மாடிகளில், சதுக்கங்களிலெல்லாம் மிதிவண்டியை மையமாகக் கொண்ட வெளிச்ச வேலைகளை உண்டாக்குவதாகும்.
“கொரோனாக்கால வேதனையான எண்ணங்களில் மூழ்கிவிடாமல் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்கிறோம்,” என்று இந்தத் திட்டத்தை ஆரம்பித்தவர் இதுபற்றிக் குறிப்பிடுகிறார். நாடெங்குமிருந்து மக்கள் தமது பழைய மிதிவண்டிகள், பிள்ளைகளின் மிதிவண்டிகள், வித்தியாசமான மிதிவண்டிகளென்று காணுமிடமெல்லாம் மின்சார விளக்குகளால் அலங்கரித்த படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். “சக்கரங்கள் சக்தியைச் சின்னமாகப் பிரதிபலிக்கின்றன,” என்று சுட்டிக்காட்டும் அவர்கள் தமது நாட்டின் வீரர்களின் சாதனையையும் பெருமைப்படுத்தி மகிழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்