மாஜி பிரெஞ்ச் பிரதமர் பலதூருக்கும் சிறைத்தண்டனை விதிக்கவிருக்கிறது நாட்டின் நீதிமன்றம்.
சில நாட்களுக்கு முன்னர் தான் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துச் சிறைத்தண்டனையும் வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி சர்க்கோஷி அதை எதித்து மேன்முறையீடு செய்திருக்கிறார். நாளை, வியாழனன்று 91 வயதான முன்னாள் பிரதமர் பலதூர் கட்சிச் செலவுகளுக்காகத் தவறான முறையில் பணம் பெற்றுக்கொண்டதற்கான [“Karachi affair”] வழக்கில் தீர்ப்பை எதிர்பார்க்கிறார்.
தனது பாதுகாப்பு அமைச்சர் லியோடார்ட்டுடன் சேர்ந்து பிரதமர் பலதூர் 1990 களில் ஆட்சியிலிருந்தபோதே இந்தப் பொருளாதாரத் தில்லுமுல்லுகள் நடைபெற்றிருக்கின்றன. பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், சவூதி அரேபியாவுக்கு பீரங்கிக்கப்பல்களை விற்பதில் அந்தந்த நாடுகளிடம் இரகசியமாகப் பணம் வாங்கி [லஞ்சம்] அவைகளைத் தமது கட்சியின் அடுத்த தேர்தலில் [1995 இல்] வெல்வதற்கான செலவுகளில் பாவித்தார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
சுமார் 2.8 மில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான இந்த ஊழல் அல் கைதா இயக்கத்தினர் பாகிஸ்தானில் ஒரு பேருந்தில் குண்டுவைத்த பின் ஏற்பட்ட விளைவுகளால் வெளியானது. அந்தப் பேருந்திலிருந்த 11 பிரெஞ்ச் பொறியியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் பிரான்ஸ் விற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.
1995 தேர்தல்களில் பலதூர் தோல்வியடைந்தார். அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடச் சிறைத்தண்டனையும், 50,000 எவ்ரோக்கள் தண்டமும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரென்ச் நீதிமன்றம் மாஜி பிரதமரை விடுவித்து, பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்