மிகப்பெரிய எரிநெய்த் துறைமுகம் உட்படப் பல முக்கிய இடங்கள் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டிருக்கின்றன.
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பல இடங்களை ஏவுகணைகள், காற்றாடி விமானங்களைக் கொண்டு தாக்கியிருப்பதாக ஹூத்தி இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். பாரசீகக் குடாவிலிருக்கும் மிக முக்கியமான எரிநெய்த் துறைமுகமும் தாக்கப்பட்ட இடங்களிலொன்றாகும்.
தனது பக்கத்து நாடான யேமனில் அதிகாரத்துக்காகப் போராடும் ஹூத்தி இன மக்களுக்கெதிரான குழுக்களுக்கு சவூதி அரேபியா உதவுகிறது. யேமனில் ஒரு புதிய அரசாங்கத்தையும் சவூதி அரேபியா தனது உபயத்தில் ஸ்தாபித்திருக்கிறது. ஷீயா இஸ்லாத்தினரான ஹூத்திகளுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது. யேமனில் நடந்துவரும் கொடுமையான போரைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் சவூதியும், ஈரானும் எனலாம்.
ஹூத்திப் போராளிகள் தாம் 14 ஏவுகணைகள், காற்றாடி விமானங்கள் கொண்டு தாக்குதலை நடத்தியதாக அறிவித்தாலும் சவூதி அரேபியா நடந்த தாக்குதல்கள் ஈரானால் செய்யப்பட்டவையே என்று குறிப்பிடுகிறது. சவூதி அரேபியாவின் ரஸ் தநூரா எரிநெய்த் துறைமுகம் தாக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்து எவ்வித எரிநெய்க் கப்பலும் தற்சமயம் வெளியே செல்ல முடியாது. தாக்குதலின் அளவைச் சவூதி அரேபியா குறிப்பிடாவிட்டாலும், “ஒரு தாக்குதலில் துறைமுகத்தையடுத்து வாழும் தொழிலாளர் குடும்பத்தினர் காயப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறது.
டிரம்ப்பின் கடைசி ஆட்சி நாட்களில் தீவிரவாதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஹூத்தி இயக்கத்தினரை சமீபத்தில் ஜோ பைடன் அரசு அப்பட்டியலிலிருந்து அகற்றியது. அத்துடன் யேமனில் நடக்கும் போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் ஈரானிலும், சவூதி அரேபியாவிலும் சர்வதேச அரங்கிலும் நடந்து வருகின்றன. அதே நேரம் சமீப வாரங்களில் யேமன் போரில் உக்கிரம் மேலும் அதிகரித்திருக்கிறது. இரண்டு பக்கத்தாரும் எதிர்ப்பக்கத்தினரைத் தாக்கியதில் பல சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நடந்திருக்கும் இந்தத் தாக்குதல் சர்வதேச ரீதியில் எரிநெய் விலையை அதிகரித்திருப்பதுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளையும் மேலும் சிக்கலான நிலைக்குத் தள்ளியிருப்பதாகத் தெரிகிறது. நடந்திருக்கும் தாக்குதல் பற்றி ஈரான் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.
ஹூத்தி இயக்கத்தினரின் சவூதி அரேபியத் தாக்க்குதலை அமெரிக்கா கண்டித்திருக்கிறது. “சாதாரண மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் என்ற சிந்தனையின்றி ஹூத்திகள் நடாத்தியிருக்கும் தாக்குதலைக் கவனித்து நாம் சவூதி அரேபியாவுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்கிறது அமெரிக்க அறிக்கை.
சாள்ஸ் ஜெ. போமன்