கிரீஸ், அகதிகளாக அங்கீகரித்து, அடிப்படை வசதிகள் கொடுக்காமல் விடுவது அவர்கள் வேறொரு ஐரோப்பிய நாட்டை நோக்கிச் செல்லத் தூண்டவா?
தனது நாட்டில் தங்கத் தஞ்சம் கொடுத்துவிட்டு அந்த அகதிகளுக்கு வாழும் வசதிகள் கொடுக்காமல் கிரீஸ் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறதா கிரீஸ் என்ற கேள்வியை ஜேர்மனிய அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள். கடந்த வருடம் ஜேர்மனியில் அகதிகளாக விண்ணப்பித்த 7,100 பேர் ஏற்கனவே கிரீஸில் அதைப் பெற்றிருப்பதாக ஜேர்மனி தெரிவிக்கிறது.
இவ்வருட முதலிரண்டு மாதங்களில் மட்டுமே கிரீஸில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட 2,000 பேர் ஜேர்மனிக்குள் வந்து அங்கேயும் அகதிகளாகப் பதிந்துகொள்வதால் ஜேர்மனி அவர்களது அகதி விண்ணப்பங்களை “ஒதுக்கி” வைப்பதாக அறிவித்திருக்கிறது. அலெக்சாந்தர் தோர்ம் என்ற ஜேர்மனிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் “கிரீஸ் தனது அகதிகளுக்கு அந்த நாட்டில் தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்து ஒழுங்காகப் பேணவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் கஷ்டப்படும் கிரீஸில் 16 % பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எல்லைகளினூடாக உள்ளே வந்து அகதிகளாக விண்ணப்பிக்கிறவர்கள் தொகை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அகதிகளாக அனுமதி பெற்றவர்களுக்கு வீட்டு வசதிகள் கிடைப்பது மிகக்கடினமாக இருக்கிறது. அகதிகளாக அனுமதி பெற்றும் தங்க வசதியின்றி 7,000 பேர் வீதிகளில் வசித்து வருகிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள் கொண்ட குடும்பத்தினராகும்.
“நாம் அகதிகளுக்கு வீடுகள் தேடிக்கொள்ளவும், வேலைகள் தேடிக்கொள்ளவும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பெரும்பாலானோ அதைச் செய்யாமல் அரசின் உதவித் தொகையில் வாழ விரும்புகிறார்கள். அதற்கு நாம் அனுமதிக்க முடியாது,” என்கிறார் கிரீஸில் குடிவரவு அமைச்சர் நோட்டிஸ் மித்தார்க்கிஸ்.
ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக அனுமதிக்கப்பட்ட அல்லது பாதுகாப்புப் பெற்ற ஒருவர் மூன்று மாத காலங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார். ஆனால், இன்னொரு நாட்டில் குடியேற முடியாது. கிரீஸை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் அங்கே திரும்பி வருவதை விரும்புவதில்லையென்றே குறிப்பிடப்படுகிறது.
ஜேர்மனிக்கு கிரீஸிலிருந்து வந்து மீண்டும் திரும்ப மறுத்த இருவர் ஜனவரியில் ஜேர்மனிய நீதிமன்றத்துக்குச் சென்றபோது அவர்கள் “கிரீஸுக்குச் சென்றால் அங்கே அவர்களுக்கு வாழ்வதற்கான வசதிகள் கிடைக்காது,” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்