முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.
தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக வலைத்தளங்களை அதைப் பற்றிக் கொதிப்புடன் எழுத அதைக் கண்ட ஒரு 18 வயது இளைஞன் அந்த ஆசிரியரைக் கொல்லத் திட்டமிட்டு நடந்தினான்.
ஏன் அந்த்ச் சிறுமி அப் பொய்யைச் சொன்னாள் என்பதை ஆராய்ந்ததில் அவள் வகுப்புக்கு வருவது மிகக் குறைவு என்று அவளைப் பல தடவைகள் கண்டித்த ஆசிரியர் சாமுவேல் பத்தி அவளை வகுப்பில் பங்கெடுக்காமல் தண்டித்திருக்கிறார் என்பது தெரிகிறது. அந்த உண்மையை வீட்டில் சொல்லப் பயந்த சிறுமி அதற்குப் பதிலாகப் பொய்யொன்றை அவிழ்த்து விட்டிருக்கிறாள்.
அப்பொய் “ஆசிரியர் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தை வகுப்பில் காட்டியபோது அவள் அதற்கெதிராக எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதனால் ஆசிரியர் அவளை வகுப்புக்கு வரவேண்டாம் என்று தண்டித்து விட்டதுமாகும்.”
உண்மை என்னவெனில் சார்ளி எப்டோ சஞ்சிகையிலிருந்த முஹம்மதுவின் படங்களை வகுப்பில் சமய பாடத்தில் காட்டிய ஆசிரியர் “இப்படங்கள் உங்களுக்கு உங்கள் இறைதூதரை அவமதிப்பதாகத் தெரியலாம். அப்படியானவர்கள் விரும்பினால் வகுப்பைவிட்டு விலகலாம், அல்லது முதுகைக் காட்டித் திரும்பியிருக்கலாம்,” என்று சொல்லியிருந்தார். குறிப்பிட்ட வகுப்பில் பொய் சொன்ன மாணவி சமூகமளிக்கவுமில்லை என்பதைச் சக மாணவர்கள் சொல்கிறார்கள்.
பொய் சொன்ன மாணவியின் தந்தை சமூக வலைத்தளங்களில் ஆசிரியருக்கு எதிராக மூன்று படங்களில் வன்மையான விமர்சனங்களைச் செய்து, “இந்த அநியாயத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வாருங்கள்,” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். அவர், பாடசாலையையும், பொலீசாரையும் தொடர்பு கொண்டு ஆசிரியரைப் பதவியிலிருந்து நீக்கவும் கோரி வந்திருக்கிறார். அவருக்கெதிரான வழக்கில் “தான் முட்டாள்தனமாக நடந்ததாகச் சொல்லி,” மனம் வருந்தியிருக்கிறார்.
பொய் சொன்ன மாணவியின் வழக்கறிஞர் அவளது நடத்தைக்காக அந்தக் கொலைக்கு அவளைக் குற்றஞ்சாட்டலாகாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தந்தையின் தவறான நடப்பே பலருக்கு ஆசிரியர் மீது பெரும் கோபத்தை உண்டாக்கி அக் கொலைக்கு விதையாக இருந்திருக்கிறது. “குற்றங்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவிதமான வழியில் செய்திகளைப் பரப்புவது தண்டனைக்குரியது,” என்று பிரான்ஸ் சட்டம் இந்தக் கொலைக்குப் பின்னால் மாற்றப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்