கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைதாக்க முயன்ற நபர் சுட்டுக்கொலைபாரிஸ் 18 இல் இன்று பகல் சம்பவம்
கூரிய ஆயுதத்தால் தாக்குவதற்கு எத்தனித்த நபர் ஒருவரை பொலீஸ் உத்தியோகத்தர் தற்பாதுகாப்புக்காக தனது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த நபர் உயிரிழந்தார்.
பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் இன்று முற்பகல்வேளை இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டது. உள்ளே செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை. சம்பவம்
மதம் மற்றும் பயங்கரவாத நோக்கம் கொண்ட தாக்குதல் அல்ல என்பது தெரிவதாக முற்கொண்டு வெளியான செய்திகள் தெரிவித்தன.
ஊடகங்களின் தகவல்களின் படி, சைக்கிளில் ரோந்து வந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் மூவர் தெருவில் குடும்பத் தகராறு ஒன்றில் தலையீடு செய்த சமயமே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றது என்பது தெரிய வருகிறது.
குடும்பத் தகராறை விசாரிப்பதற்கு பொலீஸ் உத்தியோகத்தர்களில் இருவர் சென்றசமயம் அவர்களது சைக்கிளுடன் மற்றைய உத்தியோகத்தர் தனித்து நின்ற வேளை நபர் ஒருவர் அவரை நெருங்கி கத்தியால் தாக்க முற்பட்டார். பொலீஸ் உத்தியோகத்தர் தனது குண்டாந்தடியால் அந்த நபரைத் தாக்கித் தடுக்க முற்படவே அவர் தப்பி ஓடினார்.
அவரைத் தூரத்திச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது அந்த நபர் மறுபடியும் கத்தியால் தாக்க முற்படவே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
மூன்று குண்டுகள் பாய்ந்ததில் அந்த நபர் தரையில் சாய்ந்து வீழ்ந்துள்ளார். அவசர முதலுதவிப் பிரிவினர் அழைக்கப்பட்ட போதும் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இவ்வாறு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாரிஸ் 18 ஆம் நிர்வாக வட்டகையில்(18e arrondissement) rues Boinod, Championnet, Poissonnière தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வைத்தே அந்த நபர் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக IGPN பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.