பாரிஸில் ஐயாயிரம் பேருடன் மாபெரும் இன்னிசை நிகழ்வு

பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு சனியன்று மாலை [29.05] நடைபெற்றது.

பிரபல ‘இந்தோசீனா’ (Indochina) இன்னி சைக் குழுவினர் வழங்கிய அந்த மாபெரும் இசைநடன நிகழ்வு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்த பிறகு நடத்தப்படுகின்ற முதலாவதுபெரும் உள் அரங்க நிகழ்ச்சி ஆகும்.

வைரஸ் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் எவ்வாறு உள்ளரங்குகளில் மாபெரும்நிகழ்ச்சிகளை நடத்துவது என்பதைப் பரிசோதிக்கின்ற ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாக அந்த நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை மூலம் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய சான்றுகளுடனேயே அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற போதிலும் உள்ளே சமூக இடைவெளி பேணுவதில் கட்டுப்பாடுகள் பேணப்படவில்லை.

மிக நீண்ட காலமாக இது போன்றஒரு நிகழ்ச்சிக்காகத் தாங்கள் தவம் இருந்தனர் என்று நிகழ்வில் பங்கு பற்றிய இளையோர் பலரும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தனர்.

இன்னிசை நிகழ்வில் பங்கு பற்றிய அனைவரும் வைரஸ் தொற்று ஆபத்து அதிகம் உள்ளவர்கள் என்பதால் அனைவரும் தொடர்ந்து பல அணிகளாகச் சோதனை செய்யப்படவுள்ளனர். அவர்களிடையே தொற்று தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வரும் ஜூன் மாத இறுதியில் பெற்றுக் கொள்ளப்படும்.

இதற்கு முன்னர் ஸ்பெயினிலும் இங்கிலாந்திலும் நடத்தப்பட்ட இது போன்ற பரீட்சார்த்த இன்னிசை நிகழ்வுகள் அதிக தொற்று அபாயத்தைவெளிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *