வரும் 30 வருடங்களில் தனது அணு ஆயுதங்களை 180 லிருந்து 260 ஆக அதிகரிக்க விரும்பும் பிரிட்டன்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்ட பிரிட்டன் தனது வெளிநாட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து இன்று வெளிப்படுத்தியது. ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவு, சுற்றுப்புற சூழல் மேம்பாடு மற்றும் கையிருப்பிலிருக்கும் அணு ஆயுதங்களை எண்ணிக்கையில் அதிகரித்தல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
“மற்றைய நாடுகளுக்குப் பிரிட்டன் தனது பலத்தின் அளவைக் காட்டுவது முக்கியம்,” என்று வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் குறிப்பிடுகிறார். அதன் ஒரு பகுதியாக தம்மிடமிருக்கும் 180 அணு ஆயுதங்களை முப்பது வருடங்களில் 260 ஆக்குவதற்கு பிரிட்டிஷ் அரசு விரும்புகிறது.
உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய நாடுகளாக ரஷ்யா, சீனா ஆகியவை பிரிட்டிஷ் அரசால் குறிப்பிடப்படுகின்றன. அதே சமயம் உலகின் பலம் வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகத் தொடர்புகளில் நெருங்கவும் விரும்புவதாகக் குறிப்பிடப்படுகிறது. வர்த்தகம் தவிர, வெம்மையாகி வரும் உலகின் காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நடவடிக்கைகளில் சீனா ஒரு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது.
ஆசியாவில் பிரிட்டன் நெருங்கிய அரசியல், வர்த்தக உறவைக் கொள்ள விரும்பும் மற்றைய முக்கிய நாடுகளாக ஆஸ்ரேலியா, சீனா, இந்தியா ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இதற்காக இவ்வருடத்தில் இந்தியாவுக்குப் பயணிக்கவிருக்கிறார் போரிஸ் ஜோன்சன்.
சாள்ஸ் ஜெ. போமன்