தமது நாட்டின் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டம் பெரும் வெற்றியடைந்து வருவதாகச் சொல்லும் ஐக்கிய ராச்சியம்.
நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, சராசரியாக நாளுக்குச் சுமார் 421,000 பேருக்குத் தடுப்பூசி ஏற்றிவரும் ஐக்கிய ராச்சியத்தின் தடுப்பு மருந்துத் திட்டத்தின் மூலம் இதுவரை 27 மில்லியன் பேர் அவற்றைப் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்தத் திட்டம் ஐக்கிய ராச்சியத்தின் மிகப் பெரிய தடுப்பு மருந்து வி நியோகிக்கும் திட்டமாக இருக்கிறது என்கிறார், மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மத் ஹான்கொக்.
வயதுக்கு வந்தவர்களில் பாதிப்பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் தயாரிப்புத் தாமதத்தால் மக்கள் ஆரோக்கிய மையங்களுக்குக் கிடைக்கப் போகும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை குறையும் என்று அமைச்சு சுற்றுமடல் எழுதியிருக்கிறது. இந்தியாவில் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் செரும் இன்ஸ்டிடியூட்டில் ஏற்பட்டிருக்கும் தயாரிப்புகளில் ஏற்பட்டிருக்கும் இடைஞ்சலே இதற்குக் காரணமென்று குறிப்பிடப்படுகிறது.
எனவே 40- வயதினருக்கு மே மாதத்தில் திட்டமிட்டபடி தடுப்பு மருந்துகளைக் கொடுத்து முடிக்கப்போவதில்லை என்று அம்மடல் எச்சரிக்கிறது. இதே போன்ற தாமதங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துமே வரும் ஓரிரு மாதங்கள் எதிர்நோக்குகின்றன.
இந்தியாவில் தயாரிப்பு மையத்தில் மட்டுமன்றி அஸ்ரா செனகாவின் தயாரிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் பின்னடைவுகளை நேரிட்டிருக்கிறது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தடுப்பு மருந்துகள், அவற்றைத் தயாரிக்கத் தேவையான தளபாடங்கள் போன்றவைகளுக்கான ஏற்றுமதிகளை நிறுத்தியதே அதற்கான காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்