காலையில் பச்சைக்கொடி மாலையில் சந்தேகம்; அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து அமெரிக்காவிலும் புழுதிப் படலத்துக்குள்.
கொவிட் 19 ஐத் தடுப்பதில் அஸ்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 70 விகிதம் செயல்திறம் கொண்டது, + 60 வயதினருக்கும் நம்பகரமானது என்று தமது மூன்றாவது கட்ட ஆராய்வுகளில், தெரிவதாகத் திங்களன்று அமெரிக்கா அறிவித்தது. பின்னிரவில் அமெரிக்காவின் மருந்துகளீன் பக்க விளைவுகளை ஆராயும் திணைக்களம் [National Institute of Allergy and Infectious Diseases] அதே தடுப்பு மருந்தைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து எழுந்திருக்கும் கேள்விகளை ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியமே [“போதுமான, தேவையான விபரங்களை எங்களுக்குத் தரவில்லை”] குறிப்பிட்டிருந்தது. அதனால், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கீகாரம் பெறத் தாமதமாகியிருக்கிறது. அமெரிக்கா “தடுப்பு மருந்து ஆராய்ச்சி பற்றி எங்களுக்குத் தரப்பட்ட விபரங்களில் ஒரு பகுதி காலம் கடந்தவையாக இருக்கின்றன. எனவே அஸ்ரா செனகா நிறுவனத்தை எங்கள் மருந்து பரிசீலிக்கும் திணைக்களத்துடன் சேர்ந்து சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறது.
அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகள் பற்றிப் பல கோணங்களிலிருந்தும் வெவ்வேறு காரணத்தாலான கோபக்கணைகள் பறந்து வருகின்றன. அதே சமயம் பிரிட்டனிலும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடுகளின் பெரும்பாலான மக்களிடையே அதன் மருந்து மீது அவநம்பிக்கை நிலவுவதாகக் கணிப்பீடு தெரிவிக்கிறது.
“ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தருவதாகச் சொன்ன எண்ணிக்கையைத் தராத அஸ்ரா செனகா பிரிட்டனுக்கான ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறது,” என்று அந்த நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய ஒன்றியம் தனது நெதர்லாந்து அஸ்ரா செனகா தொழிற்சாலையிலிருந்து பிரிட்டனுக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பத் தடை செய்திருக்கிறது. அந்த ஏற்றுமதித் தடைக்கான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்களும் வழங்கிவருகிறார்கள்.
உறுதிகொடுத்த அளவிலான தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டுமன்றி பிரிட்டனிலும் வரும் வாரங்களிலிருந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கும் திட்டத்தில் இழுபறி எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்குள்ளும் அந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்