இலங்கைக்கு எதிரான ஐ. நா பிரேரணை நிறைவேறியது!இந்தியா பங்கேற்கவில்லை!!

இலங்கைக்கு எதிரான ஐ. நா. மனித உரிமைகள் தீர்மானம் 22 ஆதரவு வாக்குகளால் நிறைவேறியது. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. எதிராக 11 வாக்குகள்
அளிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, டென்மார்க், பிறே சில் உட்பட 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கும் தகுதி கொண் டவை. அவற்றில் ஆஜேந்தீனா, ஆர்மீனியா, ஒஸ்ரியா, பஹாமாஸ், பிறேசில், பல்கேரியா, ஐவரி கோஸ்ட், டென்மார்க், செக் குடியரசு, பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மாலாவி, மாஷல் தீவுகள், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியக் குடியரசு, உக்ரைன், உருகுவே, ஐக்கிய ராஜ்ஜியம்- அயர்லாந்து ஆகிய 22 நாடுகளே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

பங்களாதேஷ், பொலீவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, வெனிசுவேலா, உஸ்பெஹிஸ்தான் ஆகிய நாடுகள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, பஹ்ரைன், புர்ஹினா பாஸோ,, கமரூன், கபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, நமீபியா, நேபாளம், மொறிட்டேனியா, செனகல், சூடான், டாகோ ஆகிய 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை தொடர்பான பிரேரணை ஈழத் தமிழ் மக்களுடைய கடும் அதிருப்திக்கு மத்தியிலும் சர்வதேச அளவில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகத்தில் இன்று காலை முதல் இடம்பெற்றது.

இலங்கை அரசினால் கடுமையாக எதிர்க்கப்பட்டுவந்த இந்தப் பிரேரணை நிறைவேறி இருப்பது இறுதிப்போரில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய நீதி விசாரணைகளுக்குத் தேவையான ஆதாரங்களை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்வதற்கும் மனித உரிமைகள் ஆணையகத்தை நிர்ப்பந்திக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச விசாரணைப் பொறி முறை நோக்கிய நகர்வுகளுக்கான ஒரு தொடக்கம் இது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பான உலக நாடுகளது மனித உரிமை ஆர்வலர்களது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *