கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட ஏன் சீன அரசு தயங்குகிறது?
கடந்த வருடம் சீனாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களும், வெளிநாட்டில் தற்காலிகமாக வாழும் சீனர்களும் எண்ணப்பட்டார்கள். வழக்கம்போலக் குடிமக்கள் தொகை பெருகி, எதிர்காலத்துக்கான குடிமக்கள் பற்றிய ஒரு வெளிச்சமான பதிலும் கிடைக்குமென்று சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், மக்கள் தொகையின் வயதுப் பிரிவுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததாலோ என்னவோ சீனத் தலைமை அதை வெளியிடுவதைப் பின்னால் தள்ளிக்கொண்டே போகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீனாவின் மக்கள் கணக்கெடுப்பு உயரதிகாரி “நாங்கள் சகல விபரங்களையும் ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் அதை வெளியிடவேண்டிய காலம் தள்ளிப்போய்விட்டது. எமக்கு மேலும் காலக்கெடு தேவைப்படுகிறது,” என்று பத்திரிகையாளருக்குத் தெரிவித்தார்.
உண்மையான காரணம் அதுவல்லவென்று அரசியல் வட்டாரங்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றன. சீனாவின் திட்டப்படி நாட்டின் மக்கள் தொகை 2030 வரை அதிகரித்துச் சென்று அதன் பின்னரே குறையவேண்டும். ஆனால், ஏற்கனவே பிள்ளைப்பேறுகள் குறைந்து வருவதால் சீனாவின் மக்கள் தொகை குறைய ஆரம்பித்திருக்கிறது. அந்தக் கணக்குக்கூட்டுதல்கள் உண்மையானதாக இருப்பின் சீனா பல முனைகளிலும் பிரச்சினைகளைச் சந்திக்கிறது எனலாம்.
சீன ஆண்கள் 60 வயதிலும் பெண்கள் 55 வயதிலும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். சர்வதேச ரீதியில் அது ஓய்வூதியத்துக்கு இளமையான வயதாகும். அந்த வயதில் ஓய்வூதியம் கொடுக்கவேண்டுமானால் பிள்ளைப்பேறுகள் அதிகரிக்கவேண்டும், பெருமளவு சீனர்கள் வேலைகளில் இருக்கவேண்டும், அதாவது தயாரிப்புத் துறையில் இருந்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தவேண்டும்.
பிரிட்டிஷ் ஊடகமான பைனான்சியல் டைம்ஸ் தான் சீனாவின் மக்கள் தொகைக் கணக்கு நேரத்துக்கு வராததுபற்றிய காரணத்தை கணக்கிட்டு எழுதியது. அதையடுத்து சீனாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையத்தின் இணையத்தளத்தில், “2020 இல் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது, விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்,” என்ற அறிவித்தல் மட்டும் வெளியிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் பிள்ளைப்பேறுகள் குறையுமானால் விளைவு விரைவில் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் நாட்டின் பொருளாதாரம் தயாரிக்கும் அளவும் குறையும். அது சீனாவின் சுபீட்சமான சமூகம் என்ற திட்டத்தை நிலைகுலையவைக்கும்.
சமீபத்தில் சில வருடங்களாகவே இதைச் சுட்டிக்காட்டிச் சீனாவின் மத்திய வங்கி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்களை முடிந்தளவு அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. அத்துடன் அரசிடம் “பிரச்சினை உண்டாகமுதல் நடவடிக்கை எடுங்கள்,” என்று எச்சரித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்