கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதித்து வெவ்வேறு கோரிக்கைகளுடன் மே தின ஆர்ப்பாட்டங்கள் செய்த பிரெஞ்சு மக்கள்.
நேற்று, தொழிலாளர் தினத்தன்று பாரிஸின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு கோரிக்கைகளைக் கொண்ட மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்திக் கைகலப்புக்களிலும் ஈடுபட்டார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவியபோதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பிரான்ஸின் வெவ்வேறு பாகங்களிலும் தொழிலாளர் தின ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் சங்கங்கள் நாடெங்கும் ஊர்வலங்களைத் திட்டமிட்டு நடாத்தியது. மொத்தமாக ஒரு லட்சம் மக்களுக்குக் குறையாமல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு வந்துக் கோஷமிட்டார்கள். பாரிஸில் இடதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கட்டுப்பாடின்றுப் பாரிஸ் ஊர்வலங்களில் முற்றுகையிட்டதால் பிரெஞ்ச்சுப் பொலீசார் பல இடங்களிலும் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கைகலப்புக்கள் ஏற்பட்டன.
இரண்டு வருடங்களுக்கு முன்னரிருந்து பல தடவைகளும் நாட்டின் தலைவரான மக்ரோனின் அரசியலையெதிர்த்துப் போர்க்கொடி தூக்கிப் பெருமளவில் திரண்ட மஞ்சள் சட்டையினரின் ஆதிக்கம் மே தின ஊர்வலங்களில் தெரியவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாகவே, கொரோனாக் காலக் கட்டுப்பாடுகளால் வெவ்வேறு வகையில் பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்கள் ஆங்காங்கே பேரணிகளை நடாத்தினர்.
பொலீசார் வெவ்வேறு விதிகளை மீறியதற்காகவும், கைகலப்புக்களிலும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காகவும் சில நூறு பேரைக் கைது செய்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்