“உன்னுடன் ஒரு வயதானவரைக் கூட்டிவா, உனக்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்!” எஸ்தோனியா
பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்தோனியாவில் வயதானவர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு உற்சாகமில்லை. அதனால் அவர்களைத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைப்பதற்காக அரசு ஒரு உபாயம் செய்திருக்கிறது. வயதான ஒரு நபரைத் தடுப்பு மருந்து போடுமிடத்துக்குக் கூட்டிவரும் எவராயினும் தனக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இளவயதினரிடையே பொதுவாக அந்த நாட்டில் தடுப்பூசிக்கு அதிக நம்பிக்கையிருப்பதால் தனது முறைக்காகக் காத்திராமலே வயதான ஒருவரைத் தடுப்பூசி போடவைப்பதன் மூலம் அவரும் அதைப் போட்டுக்கொள்ளலாம். அதை அறிவித்தது முதல் நாட்டின் வயதானவர்களிடையே உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். தடுப்பூசி மையங்களுக்கு நிறையப் பேர் வருகிறார்கள் என்கிறார்கள் மருத்துவ சேவையினர்.
முக்கியமாக எஸ்தோனியா – ரஷ்ய எல்லையிலிருக்கும் நார்வா நகரில் இதுவரை மிகக்குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நகரில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள். எஸ்தோனிய அரசின் மீது நம்பிக்கை குறைந்தவர்கள். மட்டுமல்ல ரஷ்ய மொழியை மட்டுமே பேசி, ரஷ்யாவின் கலாச்சாரத்தையே தொடர்பவர்கள். அங்கேயும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் தொகை உடனடியாக அதிகரித்திருப்பதைக் கவனிக்க முடிகிறது என்கிறார்கள் அப்பிரதேச மருத்துவ சேவையினர்.
நார்வாவின் ரஷ்யர்கள் தடுப்பு மருந்தை ரஷ்யாவில் வந்து போட்டுக்கொள்ளலாம் என்று ரஷ்ய அதிகாரமும் அவர்களை வரவேற்று உற்சாகப்படுத்துகிறது. நகரின் அடுத்த பக்கத்தில் ரஷ்யா அதிக தூரமில்லை. ஆயினும், கொரோனாக் காலக் கட்டுப்பாடுகள் எல்லைகளுக்கிடையிலான நகரல்களைக் கட்டுப்படுத்துகின்றன. வயதானவர்களுக்கு அதுவும் ஒரு தொல்லையாகவே இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்