பிரெக்ஸிட் விவாகரத்தால் ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் பிரான்ஸையும் – பிரிட்டனையும் உசுப்பிவிட்டிருக்கின்றன.
பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் விடயத்தில் முக்கிய பாத்திரமாகியிருக்கிறது ஜெர்ஸி என்ற தீவுகளாலான குட்டி நாடு. பிரான்ஸின் எல்லைக்கு அருகேயிருக்கும் ஜெர்ஸி தீவுகள் சுமார் 175,000 பேரைக் குடிமக்களாகக் கொண்ட 195 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நாடாகும். பிரான்ஸுக்கு அருகே இருப்பினும் ஜெர்ஸி பிரிட்டனுக்கு மிகவும் நெருக்கமானது.
பிரெக்ஸிட் பிரிவுக்குப் பின்னர் பிரான்ஸின் மீன்பிடிக் கப்பல்களுக்கு ஜெர்ஸிக்கு அருகேயுள்ள கடல்பிராந்தியத்தில் மீன்பிடிக்கும் உரிமையைக் கொடுப்பதில் இழுத்தடிப்பு நடக்கிறது. அதற்குப் பின்னணியில் பிரிட்டனின் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன என்று பிரான்ஸ் கருதுகிறது.
பிரான்ஸ் தனது நகர்வாக ஜெர்ஸி தீவுகளுக்கு நீருக்கடியே உள்ள மின்சாரவலைத் தொடர்புகள் மூலம் கொடுத்துவரும் மின்சாரத்தை நிறுத்துவிடலாம் என்று மிரட்டுகிறது. அத்துடன் சுமார் நூறு பிரெஞ்சு மீன்பிடிக் கப்பல்கள் ஜெர்ஸித் தீவுகளின் தலையாய துறைமுகத்தை முற்றுகையிட்டு அவ்வழியை மூடுவதாகக் குறிப்பிடுகிறது.
இதுபற்றிப் பிரிட்டிஷ், பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் வாய்த்தகறாறுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெர்ஸித் தீவின் அரசு தாம் அந்தப் பகுதியில் மீன்பிடிக்க வரும் பிரெஞ்சுக் கப்பல்களின் விபரங்களையும், விண்ணப்பங்களையும் முதலில் பெற்றுக்கொண்டு அவைகளை ஆராய்ந்த பின்னரே அனுமதி கொடுப்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்றும் அதற்கான நேர அவகாசம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படகுகளின் நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியைத் தாம் செய்யப்போவதில்லையென்றும் கூறுகிறது.
புதனன்று மாலை இப்பிரச்சினைக்குள் தலையிட்ட பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு பிரிட்டிஷ் கடற்பாதுகாப்புப் படகுகள் ஜெர்ஸிக்கு அருகே சானல் தீவுகளையடுத்துப் பாதுகாப்புக்காக அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்