ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள்.
கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய மக்கள் இனிமேல் நாட்டுக்குள் சுதந்திரமாகப் பயணிக்கலாம். ஆனால், அதன் அர்த்தம் கொவிட் 19 கட்டுப்பாடுகள் முழுசாக முடிவுக்கு வந்திருப்பதல்ல.
ஸ்பானிய நாட்டின் வெவ்வேறு பகுதிகள் தனித்தனி மாநிலங்களாலானவை. வெவ்வேறு அளவில் தமக்கான சுதந்திரங்கள், முடிவெடுக்கும் உரிமைகள் கொண்டவை. கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த நாட்டின் அரசு முற்பட்டபோது வெவ்வேறு மாநிலங்களின் உரிமைகள் வித்தியாசமாக இருந்ததால் வெவ்வேறு அளவில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தன. அதன் விளைவால் ஒரு சாதாரண மனிதனால் அவற்றைக் கடைப்பிடிப்பது இலகுவானதாக இருக்கவில்லை. அவைபற்றிப் பல விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
கடுமையாகத் தொற்றுக்கள் பரவிப் பலமாக இறப்புக்களால் பாவிக்கப்பட்டது ஸ்பெயின். மத்திய அரசு நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவந்து மக்களின் நடமாட்டத்தை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவந்து வியாதியின் அகோரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டியிருந்தது. அந்தச் சட்டமே இப்போது வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் மாநிலங்களில் வெவ்வேறு அளவில் பரவும் கொரோனாத் தொற்றுக்களை அந்தந்த மாநிலங்களே கட்டுப்பாடுகள் மூலம் கையாளும்.
அவசரகாலச்சட்டம் இனிமேல் செல்லுபடியாகாது என்பதால் இனிமேலும் மக்களின் நடமாட்டத்தை நாடு முழுக்கக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதிகாரங்கள் நீதிமன்றம் வரை போய்த்தான் அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். இது தொடர்ந்தும் நாட்டின் அரச அதிகாரிகளுக்குத் தலையிடியாகவே இருக்கப்போகிறது. கடைகள், தவறணைகளின் செயற்பாட்டு நேரங்கள் அவசரகாலச் சட்டங்கள் இல்லாததால் மாற்றமடையப்போவதில்லை.
நாட்டின் தலைவர்கள் மக்களிடம் தொடர்ந்தும் கவனமாகவே புழங்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். அதேசமயம் நாட்டின் சக்கரங்கள் இயங்க ஆரம்பிப்பது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்