ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருட்கள் விற்பவர்களைக் கொன்ற பொலீசார் மீது நகரத் தலைமையும், ஐ.நா-வும் கண்டனம்
பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரின் (Favela) பவேலா என்றழைக்கப்படும் பகுதி போதைப் பொருட்கள் விற்கும் குழுக்களுக்கும் அவர்கள் செய்யும் மனிதர்களைக் கடத்துதல், கப்பம் கேட்டல் போன்றவைக்குப் பிரபலம் பெற்றது. நகரின் ஆளுமைக்குக் கட்டுப்படாமல் போதைப் பொருட்கள் விற்கும் குழுக்களின் ஆட்சியே அப்பகுதியில் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள் வாழும் அப்பகுதி சமூகத்தின் மிகப் பின் தங்கிய பகுதியாகக் கணிக்கப்படுகிறது.
சுமார் 38,000 பேர் வாழும் இப்பகுதியில் போதைப் பொருட்களை விற்கும் ஒரு குழுவைக் கைதுசெய்யச் சென்ற ரியோ டி ஜெனிரோ பொலீசார்களில் ஒரு நடுத்தர வயதுக்காரரை அக்குழுவினர் தலையில் குறிவைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அதற்குப் பழிவாங்குவதற்காக அப்பகுதிக்குள் ஒன்பது மணி நேரம் பலமான ஆயுதங்களுடன் தாக்குதல் நடாத்தியது பொலீஸ் படை.
பொலீசாரின் தாக்குதல் முடிந்தபின் அங்கே ஒரு இராணுவப் போர் நடந்தது போன்ற நிலபரம் நிலவியது என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்பத்தில் 24 பேர் இறந்ததாகத் தெரியப்படுத்தப்பட்டது. மூன்று நாட்களின் பின் அத்தொகை 28 ஆக அதிகரித்திருக்கிறது. பலர் காயத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பவேலா பகுதியில் பல இடங்களில் இறந்தவர்களின் சடலங்கள் சிதறுண்டு, இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டதாகப் பல சாட்சிகளும் குறிப்பிடுகிறார்கள்.
நகரின் குப்பப் பகுதியான, கறுப்பினத்தினர் வாழும் அப்பகுதியினர் எவரையும் பொலீசார் போதைப் பொருள் விற்பவர்களாகவே கணிப்பதாகவும் இஷ்டப்படி தமது அராஜகத்தைக் காட்டுவதாகவும் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் நடந்த இத்தாக்குதல் பிரேசில் சரித்திரத்திலேயே மிக அதிகமானவர்கள் பொலீசாரால் கொல்லப்பட்ட சம்பவமாகும். ரியோ டி ஜெனிரோ நகரபிதா கொரோனாத் தொற்றுக்களின் சமயத்தில் இப்பகுதிகளில் எவ்வித பெரும் பொலீஸ் தாக்குதல்களும் நடக்கலாகாது என்று உத்தரவிட்டிருந்து இது நடந்திருப்பதாகத் தெரிகிறது.
பொலீசாரின் நடவடிக்கை பற்றி உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி இறந்தவர்களில் பாதிப்பேருக்கும் போதை மருந்துக் குழுக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெரியவருகிறது. தமது ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுச் சரணடைந்தவர்களையும் பொலீசார் கொன்றிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச ரீதியிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தச் சம்பவம் பற்றி ஐ.நா-வின் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக் கடும் கண்டனம் தெரிவித்திருகிறது. கடந்த 23 வருடங்களில் இப்படியான பின் தங்கிய நகரப் பகுதிகளில் பொலிசார் சுமார் 21,000 பேரைச் சுட்டுக் கொன்றிருப்பதாகப் புள்ளிவிபரங்களிலிருந்து தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்