ஈரானின் சிறையிலிருக்கும் அரசியல் கைதியொருவரின் வேண்டுகோளையேற்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்து சேர்ந்தன.
இஸ்லாமின் ஆன்மீக இயக்கங்களிலொன்றான டெர்விஷ் சுபி நம்பிக்கையுள்ளவர் ஷரீபி மொகடாம். இவர் 2018 இல் டெர்விஷ் அமைப்பினருக்கும் ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதல்களில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்ததாகக் குறிப்பிடப்படும் அந்தச் சம்பவத்தின்போது டெர்விஷ் சிறுபான்மையினர் சுமார் 300 பேர் சிறைப்படுத்தப்பட்டார்கள்.
ஈரானின் மிகப்பெரிய சிறைச்சாலையான தெஹ்ரான் சிறைச்சாலையில் தனது கருத்துக்களை வெளியிட்டு அரசுக்கெதிரான புரட்சி செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டு ஏழு வருடங்கள் தள்ளப்பட்டிருக்கிறார் ஷரீபி மொகடாம். அவர் தனது சமீபத்தைய கடிதமொன்றில் நாட்டு மக்களை நோக்கி எங்கள் சிறைக்குப் புத்தகங்கள் அனுப்பி வையுங்கள் என்று கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று 7,000 க்கும் அதிகமான புத்தகங்கள் அந்தச் சிறைக்குக் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஷரீபியின் மனைவி தனது கணவனுடைய வேண்டுகோளை ஈரானியர்களுக்கு டுவிட்டியிருந்தார்.
சுமார் 15,000 பேருக்கு அதிகமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரான் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மட்டுமின்றி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்களும் உண்டு. அங்கே இருப்பவர்களுக்கு வாசிப்பதற்காகச் சிறிய அளவில் கிடைக்கும் புத்தகங்களில் பெரும்பாலானவை மதம் சம்பந்தப்பட்டவைகளே. புத்தகங்களை விட அதிகமான அளவில் போதைப் பொருட்கள் அங்கு உலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், மிகவும் மோசமான முறையில் கைதிகள் நடாத்தப்படுகிறார்கள் என்று அங்கிருந்து வெளியேறிய பலர் சாட்சி தெரிவித்திருக்கிறார்கள்.
ஷரீபி மொகடாம் வேண்டுகேளுக்கிணங்கி ஈரானின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்திருக்கும் புத்தகங்களில் “அனிமல் பார்ம்”, “மாஸ்டர் அன்ட் மார்கரீத்தா”, “லிட்டில் பிரின்ஸ்” போன்ற பிரபலமான சர்வதேசப் படைப்புக்கள் முதல் ஈரானின் நவீன கவிதைப் புத்தகங்களும் அடக்கம். இனிமேல் அப்புத்தகங்களெல்லாம் அங்கிருக்கும் சகல கைதிகளுக்கும் வாசிப்பதற்குக் கிடைக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்