ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும் இன்றும் அங்கே கலவரங்கள் தொடருமா என்ற பயம் நிலவுகிறது.
கிழக்கு ஜெருசலேமில் ஆறு பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று இஸ்ராயேலின் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. ஷேய்க் யர்ரா எந்த அப்பகுதியில் அந்தக் குடும்பம் 60 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த வீடு முன்பு யூதர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சில நாட்களாகவே ஜெருசலேமில் பெரும் கைகலப்புக்கள் நடந்து வருகின்றன.
ஜெருசலேமுக்குள் வாழும் பாலஸ்தீனர்கள் திரண்டெழுந்த இஸ்ராயேலிய அரசுகெதிராக ஊர்வலங்களும், கூட்டங்களும் நடாத்தி வருகிறார்கள். யூதர்களும் பாலஸ்தீனர் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட பொலீசாரும் சேரவே பல கைகலப்புக்கள், தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 200 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டிருக்கிறார்கள்.
ஜெருசலேமின் எல்லையிலிருக்கும் இஸ்லாமியப் புனித தலமான அல் அக்சா பள்ளிவாசல் பிராந்தியத்திலும் பாலஸ்தீனர்களுக்கும் பொலீசாருக்கும் கைகலப்புக்கள் உண்டாகியிருக்கின்றன. புனித ரமழான் மாதத்தையொட்டி அங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கூடிவருகிறார்கள். அவர்களுடைய தலத்தை அடுத்தே யூதர்களின் புனித தலமும் இருப்பதால் அங்கே நடக்கும் கைகலப்புக்கள் இரு சாராருக்குமிடையே போராகலாம் என்ற அச்சம் ஜெருசலேமில் கண்காணிக்கும் ஐ.நா-வின் படையினராலும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடங்களைத் தவிர இஸ்ராயேலின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் இருக்கும் மற்றைய பாலஸ்தீனக் குடியிருப்புக்களிலும் மக்கள் ஒரு போருக்குத் தயாராவது போலிருப்பதாகச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
இஸ்ராயேலின் சட்டப்படி பாலஸ்தீனர்கள் வாழும், பாவிக்கும் நிலம் தனது பூர்வீகச் சொத்து என்று யூதர்கள் பத்திரங்களைக் காட்டிக் கோரி நீதிமன்றம் செல்லலாம். ஆனால், அதே போன்று யூதர்கள் வாழும் வீடுகள் தமதென்று நிரூபிக்கும் உரிமை பாலஸ்தீனர்களுக்கு இல்லை. குறிப்பிட்ட சட்டம் அநீதியானது என்று நீண்ட காலமாகச் சர்வதேச ரீதியில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
ஜோர்டானின் கட்டுப்பாட்டிலிருந்த ஜெருசலேமின் பகுதிகளை 1967 இல் இஸ்ராயேலின் படைகள் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. அதன் பின்னர் இஸ்ராயேல் அப்பகுதிகளை 1967 இல் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டது. அப்பகுதிக்குள் வாழும் பாலஸ்தினரின் நிலத்தை முழுவதுமாகப் பறிக்கவே இஸ்ராயேல் படிப்படியாகத் திட்டமிட்டுச் செயற்படுவதாகவே பாலஸ்தீனர்கள் கருதுகிறார்கள்.
எனவே இஸ்ராயேல் தனதாக்கிக்கொண்ட ஜெருசலேமின் நாளைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் நடக்கும் கொண்டாட்டங்களின் போது மேலும் பல கைகலப்புக்கள் உண்டாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்