மோசமாகி வரும் ஆப்கானிஸ்தானால் விசனப்படும் தஜீக்கிஸ்தான் அரசின் இராணுவத்தைப் பலப்படுத்த ரஷ்யா தயாராகிறது.
அமெரிக்க, நாட்டோ படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதை எதிர்பார்த்து ஆப்கானிய அரச படைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். மே மாத ஆரம்பத்திலிருந்து அவர்களுடையே தாக்குதல்கள் பொதுமக்கள் மீதும் திரும்பியிருப்பதுடன் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தமது பிடியை இறுக்கிவருகிறார்கள்.
தலிபான்கள் தமது நாட்டு அரச படைகளைத் தாக்குவது ஒரு பக்கமிருக்க, தங்களுக்குள்ளேயே தாக்கி உள்நாட்டுப் போரை மீண்டும் ஏற்படுத்தக்கூடும் என்பது மேலுமொரு பயமாகும். ஏனெனில் தலிபான்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் ஆப்கானின் வெவ்வேறு பாகங்களிலிருக்கும் வெவ்வேறு இனத்தவரின் இயக்கங்களின் கூட்டமைப்பே ஆகும். ஏற்கனவே தங்களுக்குள் கடும் போரில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை உலகம் அறியும்.
ஆப்கானில் மீண்டும் முன்னரைப் போன்ற நிலபரம் ஏற்படுமானால் அதனால் பக்கத்து நாடுகளும் பாதிக்கப்படும் என்பது நிச்சயம். ஆப்கானிலிருக்கும் சிறுபான்மையினரில் தாஜிக்கியரும் அடங்கும். சுமார் 37 % ஆப்கானியர்கள் தாஜிக் இனத்தவராகும். தலிபான்களிலிருக்கும் ஒரு பகுதியினர் தாஜிக் போராளிகளாகும். ஆப்கானிய நிலைமை கடந்த வருட இறுதியில் மோசமாக ஆரம்பித்தபோதே தாஜிக்கிஸ்தானுக்குள் ஊடுருவும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபடவே எல்லைகள் மூடப்பட்டன.
தனது பாதுபாப்பைப் பற்றி விசனப்படும் தாஜிக்கிஸ்தானுக்கு உதவுவதாக உறுதி கூறியிருக்கிறார் ரஷ்யத் தலைவர் புத்தின். ஏற்கனவே ரஷ்யாவின் இராணுவத்தில் 7,000 பேர் தாஜிக்கிஸ்தானில் மூன்று முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.
ரஷ்யாவில் புத்தினைச் சந்தித்த தாஜிக் தலைவர் எமோமாலி ரஹ்மோன் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ரஷ்யாவின் இராணுவத்தைப் பலப்படுத்த புத்தின் இணங்கியிருக்கிறார். இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 76 வருடத்தைக் கொண்டாட மொஸ்கோவுக்கு வந்திருந்த ரஹ்மோனுக்கு, “நிலைமை மோசமடைவதால் நீங்கள் கவலையுடனிருப்பதை அறிவோம். ரஷ்யா தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் உங்களுக்குத் தருமென்று உறுதியளிக்கிறேன்,” என்று புத்தின் குறிப்பிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்