ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவை மொய்த்து இசைபாடப்போகின்றன சில் வண்டுகள்.
cicada என்று அழைக்கப்படும் சில் வண்டுகள் 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மில்லியன் அளவில் சத்தமிட்டுக்கொண்டு பல இடங்களை மொய்த்து ஆக்கிரமிக்கப்போவதை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்தச் சில் வண்டுகள் உண்டாக்கும் இரைச்சல் சத்தம் ஒரு பகுதியாரை எரிச்சல் படுத்தும் அதே சமயம் அவை வருமென்பதை அறிந்த ஆவல் இன்னொரு பகுதியினரிடமிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பதினேழு வருடங்கள் நிலத்துக்குக் கீழே வாழ்ந்து முழு அளவுக்கு மெதுவாக வளர்ந்த அச்சில்வண்டுகள் இவ்வருடம் அமெரிக்காவில் தொடர்ந்தும் குளிர் காலநிலவுவதால் வெளியே வந்து செடிகொடி, மரங்களை ஆக்கிரமிப்பது சில நாட்களிலிருந்து ஒரிரு வாரங்கள் தாமதமாகியிருக்கிறது. 17 வருடங்களுக்கு ஒரு தடவை வெளியே வரும் இவையின் வாழ்க்கைக் காலம் சுமார் ஒரு வாரம் மட்டுமே. அதற்குள் முட்டை போட்டுவிட்டு அவை இறந்துவிடுகின்றன. அவை உண்டாக்கும் சத்தமானது உலகிலேயே சிறு பிராணியொன்று உருவாக்கும் மிகப்பெரிய சப்தம் என்று கருதப்படுகிறது.
மில்லியன்களாக வெளியே வந்து பறக்கும் இச் சில்வண்டுகள் இறந்துபோவதும் கொத்துக் கொத்தாக என்பதால் இவை பரவலாக இருக்கும் பகுதிகளில் வீடுகளின் திறந்த பக்கங்களெல்லாம் இறந்துபோன சில்வண்டுகளால் நிறைந்துவிடும். எனவே சிலர் இவ்வருடம் சில்வண்டுகள் வெளிவரப்போவதை அருவருப்புடனும் எதிர் நோக்குகிறார்கள். ஆனால், இந்தச் சில்வண்டுகள் பல பறவைகளுக்கு விருந்தாகவும் மாறுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்