உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது.
இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக மூழ்கிப் போயிருப்பதால் கொவிட் 19 நோயாளிகளுக்கான அடிப்படை மருத்துவமே செய்யமுடியாத நிலையில் நேபாளம் சர்வதேசத்திடம் உதவிகேட்டுக் கையேந்தி நிற்கிறது.
மருத்துவ மனைகளிலோ கொவிட் நோயாளிகளைக் கையாள்வதற்கான உபகரணங்களோ, மருந்துகளோ மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் பலர் இறக்கிறார்கள் என்று அங்கு சேவையிலிருக்கும் உதவி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. மருத்துவ மனையில் இடம் கேட்டு வரிசையில் நிற்பவர்கள் பலர் இறக்கிறார்கள்.
ஒரு நாட்டில் எடுக்கப்படும் கொரோனாத் தொற்றுப் பரீட்சைகளில் 7- 8 விகிதம் உறுதிப்படுத்தப்பட்டால் அது கவலைக்குரிய நிலைமை என்கிறது உலக ஆரோக்கிய அமைப்பு . நேபாளத்திலோ பரிசோதிக்கப்படுகிறவர்களில் 49 விகிதமானவர்களுக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. இது உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்படைந்த நிலைமை என்று குறிப்பிடப்படுகிறது.
நேபாளத்துக்காக இந்தியா முதலில் ஒரு பகுதி தடுப்பு மருந்துகளை வழங்கியிருந்தது. அவற்றைக் கொண்டு நாட்டின் மருத்துவ சேவையினருக்குத் தடுப்பூசி கொடுத்தல் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் பத்து விகிதத்தினருக்கு ஒரு தடுப்பூசியும் சில ஆயிரம் பேருக்கு இரண்டாவது தடுப்புசிகளும் கொடுத்த நிலையில் அவை முடிந்துவிட்டன. எனவே தடுப்பு மருந்து கொடுத்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது நேபாளம் தனது தடுப்பு மருந்துகளுக்காக சீனாவிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்