அடுத்தடுத்த இரண்டு வருடங்களிலும் பலமான பொருளாதார வளர்ச்சி உண்டாகுமென்று கணிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்காலம் வெளிச்சமாக இருக்குமென்று நம்ப ஆரம்பிக்கின்றன. அவைகளில் முக்கியமாகப் பொருளாதார வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமாக இருக்கும் என்று ஒன்றிய நாடுகளிலிருந்து வெளியாகும் புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வேகம் அதிகரித்து நாட்டு மக்கள் பலரும் அதைப் பெற்றுக்கொள்வதே என்று குறிப்பிடப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியான பொருளாதார வளர்ச்சி 2021 இல் 4.2 % ஆகவும் 2022 இல் 4.4 % ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இவ்வருட ஆரம்பத்தில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் கிடைக்காததால் மந்தமாக இருந்த தடுப்பூசி கொடுத்தல் சமீப மாதங்களில் வேகமடைந்திருக்கிறது. அதனால் பல நாடுகளும் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதால் பொருளாதாரச் சக்கரம் வேகமாக உருள ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்காலத்துக்குப் பின்னரான அபிவிருத்தி நிதியுதவிகள் ஓரளவு தயாரான நிலையில் பாவிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
கடந்த வருடம் முறையே 10.8 %, 8% என்று வீழ்ந்திருந்த ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 5.9 %, 5.7 % ஆக வளரும் என்று அந்த நாடுகள் கணித்திருக்கின்றன. இத்தாலி இவ்வருடம் 4.2 %, அடுத்த வருடத்தில் 4.4 % என்று தனது பொருளாதார வளர்ச்சியைக் கணிப்பிட்டிருக்கிறது. பிரான்ஸ் அடுத்த வருடம் 4.2 % வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.
ஸ்கண்டினேவிய நாடுகளில் சுவீடன் தனது பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 4.4 %, அடுத்த வருடம் 4.2% என்று வளருமென்று கணித்திருக்கிறது. டென்மார்க்கின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 2.9 %, அடுத்த வருடம் 3.6% என்று எதிர்பார்க்கிறது. பின்லாந்தின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 2.7 %, அடுத்த வருடம் 2.8 % ஆக இருக்கும். பின்லாந்தின் பொருளாதாரம் கடந்த வருடம் 3 % விடவும் குறைவாகவே வீழ்ச்சியடைந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்