ஆஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் விளைச்சல் அதிகம், விளைவு எலிகள் சாம்ராஜ்யத்தின் தொல்லைகள் தாங்கமுடியவில்லை.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் எலிகளின் சாம்ராஜ்யம் அளவுக்கதிகமாகி மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கும் அவர்களுடைய அறுவடைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் எலிகளின் படை, பாடசாலைகள், வியாபார தலங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் நுழைந்து அகப்படுபவைகளை அழித்தொழிக்கின்றன. இதனால், பல நிறுவனங்கள் முழுவதுமாக முழுகிவிடும் நிலைமை உண்டாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமையின் உக்கிரம் தாங்கமுடியாத விவசாயிகள் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் கூடித் தமக்கு உதவி வேண்டுகிறார்கள். தலைக்கு 25,000 டொலர்கள் உதவித் தொகையாகக் கேட்டிருக்கும் அவர்களைச் சந்திக்க அமைச்சர்கள் எவரும் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. அந்த உதவித்தொகையைப் பாவித்து எலிகளை அழிக்கும் நஞ்சுகளை வாங்க அவர்கள் விரும்புகிறார்கள்.
எலிகளின் தொகைகள் அதிகரித்து அவைகள் கட்டுக்கடங்காமல் பெரும் அழிவுகளை ஏற்படுத்துவது ஆஸ்ரேலியாவுக்கு இது முதல் அனுபவமல்ல. அவ்வப்போது ஏற்படும் இந்த எலிகளின் தொல்லை இவ்வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் ஆரம்பித்துவிட்டது. அது ஆஸ்ரேலியாவின் சரித்திரத்திலேயே மோசமான ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த எலித்தொல்லைகளின் காரணம் ஆஸ்ரேலியாவின் இப்பகுதிகள் இவ்வருடத்தில் மிகவும் அதிகமாக அறுவடைகளைக் கண்டிருப்பதாகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அத்துடன் எலிகள் மிக வேகமாகப் பெருகும் இனமாகும். அறுவடைகளின் அதிகரிப்பால் தானியங்கள் அவைகளுக்கு உணவாகவே அவைகளின் இனப்பெருக்கம் பல மடங்குகளால் அதிகரித்திருக்கிறது.
வழக்கமாக எலிகளைக் கொல்வதற்காக நஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. பதிலாக வேறு இயற்கை வழிகளையும் பாவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க முற்படுகிறது அரசு. அதற்காக விவசாயிகளுக்கு புதிய கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய அறிவுறுத்தல்களைக் கொடுக்கும் வகுப்புக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்