கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது
தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான ஏற்றுமதி இறக்குமதிகளையும் நிறுத்தியது.
நாட்டுக்குள்ளிருக்கும் நகரங்களின் எல்லைகளும் மூடப்பட்டன. மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறலாகாது என்று கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனால் மக்கள் பட்டினியில் வீட்டுக்குள்ளேயே இறந்தாலும் எந்தத் தேவைக்கும் வெளியே போகமுடியாததாயிற்று. இவைகளால் ஒரு வேளை கொரோனாத் தொற்றுக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம், ஆனால், நாடு முன்னெப்போதுமில்லாத வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாகச் வழக்கமாக வட கொரியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்தும், அவர்கள் எல்லையினூடாகத் தப்பவும் உதவும் லிங்க் என்ற தென் கொரிய அமைப்பு தெரிவிக்கிறது.
தமது நாட்டு அரசிடமிருந்து தப்பியோடும் வட கொரியர்கள் சீனாவினூடாக மூன்றாவது நாட்டுக்குத் தப்புவதுண்டு. வருடாவருடம் சுமார் 1,000 பேராவது லிங்க் அமைப்பின் உதவியுடன் தப்புவதாகத் தெரிகிறது. அதைத் தவிர வட கொரியாவுக்குள் வெளியேயிருந்து பொருட்களைக் கடந்துவது நடப்பதுண்டு. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து எவரும் எல்லைகளால் தப்பியோட முடிவதில்லை. மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்படும் நூற்றுக்கணக்கான கி.மீ எல்லைகளில் நகருபவை எதையும் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பிக்க முதல் எல்லையால் தப்பியோடிய 229 பேருக்குப் பின்னர் எவரும் வெளியேறவில்லை என்கிறது லிங்க். தப்பியோடியவர்கள் வெளியேயிருந்து வட கொரியாவுக்குள் வாழும் தமது உறவினர்களுக்கு எல்லைகளின் மூலம் களவாகப் பணம் கொடுப்பதும் முற்றாக நின்றுவிட்டது.
வட கொரிய பாதுகாவல் அமைப்பு கண்ணுக்குள் எண்ணெயை ஊற்றிக்கொண்டு மனித நடமாட்டங்களைக் கவனிப்பதால் பெரும்பாலும் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டாலும் சீனர்கள் அவர்களுடைய நிலை முற்றாக கைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஒரு ஸ்திரமான கேடயமாக வட கொரியாவை அவர்கள் பாவிக்கிறார்கள். எனவே வட கொரியாவின் சமூக, பொருளாதார சக்கரங்கள் ஆகக்குறைந்த அளவிலாவது சுற்றும்படி பார்த்துக்கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது.
அதனால் வட கொரியா ஒரு முழுப் பட்டினிக் காலத்தை எதிர்நோக்கவில்லை என்றே கணிப்பிடப்படுகிறது. சமீப வருடங்களில் வட கொரியாவின் அதிபர் கிம் யொங் உன் நாட்டில் ஓரளவு தனியார் முயற்சிகளை ஊக்குவிக்க ஆரம்பித்திருந்தார். விளைச்சல்களும் சமீப காலத்தில் ஓரளவு வெற்றிகரமாகவே இருந்ததால் மக்களுக்கு ஓரளவு உணவு கிடைக்கிறது. கறுப்புச் சந்தைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அரசின் கடைகளில் கொள்வனவு செய்யப் போகிறவர்கள் கடைக்குள் ஒருவருடனொருவர் பேசிக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை.
தென் கொரிய மனிதாபிமான அமைப்பின் கணிப்பின்படி வட கொரியா கொரோனாக் காலத்துக்கு முன்னிருந்த நிலைக்குக்கூடத் திரும்பிப் போகப்போவதில்லை. மக்கள் மீதான கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டிருப்பது அரசுக்குத் தனது இஷ்டப்படி இயங்க வாகாகிவிட்டதால் இதே நிலையே தொடர்ந்து பேணப்படலாம் என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்