44 மில்லியன் மக்களில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசிகள் இரண்டையும் எடுத்துக்கொண்ட மருத்துவ சேவையை நம்பாத உக்ரேன்.
சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் உக்ரேனர்கள். அதே மனப்பான்மை தற்போதைய லஞ்ச ஊழல்கள் நிறைந்த அரச திணைக்களங்கள் மீதும் தொடருகிறது. கொரோனாத் தொற்றுக்களின் தாக்குதலையும் அலட்சியப்படுத்தித் தடுப்பு மருந்துகளை எடுப்பதில் பெரும் தயக்கம் காட்டுகிறார்கள் உக்ரேன் மக்கள்.
வறிய நாடுகளுக்கான ஐ.நா-வின் கொவக்ஸ் திட்டம் மூலமாக ஏப்ரல் மாதத்தில் உக்ரேன் 117,000 பைசர் பயோன்டெக் தடுப்பு மருந்துகளைப் பெற்றிருகிறது. அதே நிறுவனத்துடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தப்படி மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகளைக் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்வார்கள். செரும் இன்ஸ்டிடியூட்டும் 500,000 தடுப்பு மருந்துகளை உக்ரேனுக்கு விற்றிருக்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைப் பாவிக்க உக்ரேன் மறுத்துவிட்டது.
சுமார் 44 மில்லியன் மொத்தக் குடிமக்கள் உள்ள உக்ரேனில் இரண்டு மில்லியன் பேர் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் தொகை சுமார் 44,500 ஆகும். ஒரு மில்லியன் பேருக்கு ஒரு தடுப்பூசி கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதைப் பெற்றுக்கொண்டோர் தொகை 10,000 மட்டுமே.
தடுப்பு மருந்துகளின் மீது பரவலாக அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர் உக்ரேன் மக்கள். அது எங்கிருந்து வருகிறது என்று தமக்கு உண்மை தெரியாது என்பது முதல் அது தமக்கு அவசியமில்லை என்பது போன்ற பற்பல காரணங்களால் அவர்கள் தயங்குவதாகத் தெரிகிறது.
மருத்துவ சேவையினரால் தடுப்பூசி போடுவதற்காக அழைக்கப்படுகிறவர்களில் 50 விகிதமானோரே அதைப் பெற்றுக்கொள்ள முன்வருவதாக அச்சேவையிலீடுபடுகிறவர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். நாட்டின் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பல வருடங்களாகுமென்று குறிப்பிடுகிறார்கள் உக்ரேன் மருத்துவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்