எவரெஸ்டில் ஏறுபவர்களிடையே பரவுகிறது கொவிட் 19, அதை மறுதலித்து வருகிறது நேபாள அரசு.
இந்தியாவிலும், நேபாளத்திலும் மிகவும் வேகமாகப் பரவிப் பாதிப்புக்களையும், இறப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது கொவிட் 19 என்பது சர்வதேச ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகவே பெரிதும் பேசப்படும் செய்தியாகும். அதே வேகத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவ்விரண்டு நாடுகளையும் இணைக்கும் இமாலயத்தின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அங்கே வந்திருப்பவர்களிடையேயும், அவர்களுக்குச் சேவை செய்பவர்களிடையேயும் கூட அவ்வியாதி பரவி வருவதாக அங்கே வந்திருக்கும் மலையேறுபவர்கள் மூலம் தெரியவருகிறது.
எவரெஸ்ட்டை ஏறுவதற்காக நோர்வேயிலிருந்து வந்திருந்த எர்லாண்ட் நெஸ் என்பவர் அதற்கான அடிவார முகாமில் தங்கினார். தனது பயிற்சிகளுக்காக முதல் ஒன்பது நாளில் அப்பிராந்தியங்களில் ஏறிய அவர் சுகவீனமுற்றார். சுமார் பத்து நாட்களின் பின்னர் காட்மண்டுவுக்கு ஹெலிகொப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேபாள மலையேறிகளைக் காப்பாற்றும் அமைப்பின் மூலம் எவரெஸ்டை ஏற வந்திருந்த 17 பேருக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அப்பிராந்திய சுற்றுலா அமைப்போ மூவருக்கு மட்டுமே தொற்றுக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. நேபாள அரசோ அந்த அடிவார முகாமில் கொரோனாத்தொற்றுக்களே இல்லை என்கிறது.
எந்த வருடத்தையும் விட மிக அதிகமான பேருக்கு எவரெஸ்ட்டில் ஏறுவதற்காக இவ்வருடம் நேபாள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமாக அந்த முகாமுக்கு ஏறுபவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் அதிகமாகத் தனது சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே நேபாள அரசு அங்கே கொவிட் 19 பரவுவதை மறைத்து வருவதாகக் கருதப்படுகிறது.
ஏறுபவர்களுக்குச் சேவை செய்வதற்காக அங்கே வந்திருக்கும் ஷெர்ப்பாக்கள் பெரும்பாலும் ஏழைகளே. தமது வருமானத்தை இழக்கலாகாது என்பதால் அவர்கள் தமக்குத் தொற்றின் அறிகுறிகள் இருப்பினும் அதை மூடி மறைக்கிறார்கள். ஏற வருபவர்களும் ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்திருப்பதால் திரும்பிப் போக விரும்புவதில்லை. இந்த நிலையில் அடிவார முகாமில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் ஒழுங்காகப் பேணப்படுவதில்லை என்கிறார் அங்கே ஏறுபவர்களுக்காக மருத்துவ உதவி சேவையிலிருக்கும் மருத்துவர்.
மருத்துவர் திரு புருக்கரின் கணிப்புப்படி மேலும் சில வாரங்களில் எவரெஸ்ட் அடிவார முகாம் முற்றாகக் காலியாகிவிடும். உயரமாக இருக்கும் அப்பகுதியில் மிக அதிகமானவர்கள் நெருக்கமாக உலவுவதால் கொரோனாத் தொற்றுக்கள் பரவுவது மிகவும் வேகமாக இருக்கும் என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்