பால்டிக் நாடுகள் முதல் தடவையாக தமது மின்சாரத்துக்கான பொறியை வைத்திருக்கும் ரஷ்யாவிலிருந்து விடுபடப்போகின்றன.
1990 க்குப் பின்னரே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தங்களைத் தனித்தனி நாடுகளாக பால்டிக் நாடுகள் மூன்றும் பிரகடனப்படுத்திக்கொண்டன. ஆனாலும், அவர்களுடைய மின்சாரப் பகிர்தல் தொடர்ந்தும் ரஷ்யாவுடைய மின்சார வரையமைப்புடன் தான் சேர்ந்திருக்கிறது. லித்தவேனியா, எஸ்தோனியா, லத்வியா ஆகிய மூன்று நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தமது மின்சாரவலையை இணைத்துக்கொள்ள நீண்டகாலமாகவே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும் ரஷ்யாவின் மின்சாரவலையுடன் இணைக்கப்பட்டிருப்பினும் இந்த மூன்று நாடுகளும் ரஷ்யாவின் மின்சாரத்தை வாங்குவதை நிறுத்திவிட்டன. தற்போதைய நிலையில் ரஷ்யா இந்த மூன்று நாடுகளின் மின்சாரப் பகிர்வு அழுத்தத்தை மட்டுமே பராமரித்து வருகிறது. ஒரே வலையிலிருப்பதால் ரஷ்யாவின் மின்சாரப் பகிர்வு அரசியல் இந்த நாடுகளின் மீதும் நிழலாக விழும். விரும்பினால் ரஷ்யா இந்த நாடுகளுக்கான மின்சாரம் கிடைக்காமலிருக்கச் செய்யவும் முடியும்.
மூன்று நாடுகளும் தங்களுடைய மின்சாரத் தயாரிப்பைத் தமக்குள் பகிர்ந்துகொள்ளவும் செய்வதுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் மின்சாரத்தை வாங்கி வருகிறார்கள். லித்தாவனில் அலிதுஸ் நகரில் நவீன மின்சாரத் தேக்கல், பகிர்தல் ஆகியவற்றுக்கான மையம் தயாராகி வருகிறது. அதன் மூலம் போலந்துடன் தமது மின்சார வலையை இணைத்து ஐரோப்பிய ஒன்றிய வலையில் ஒரு பகுதியாவதே பால்டிக் நாடுகளின் கனவாகும். அதற்கான பணிகள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து வேகமாக நடந்து வருகின்றன. 2025 இல் இவைகள் தயாராகி இயங்க ஆரம்பிக்கும்போது பால்டிக் நாடுகள் தமது மின்சார வலைத்தொடர்பை ரஷ்யாவின் பொறுப்பிலிருந்து முழுவதுமாக விடுவித்துக்கொள்ளும்.
சாள்ஸ் ஜெ. போமன்