ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், ஒன்றிய நாடுகளும் பிராந்தியத்தில் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டை அமுல்படுத்தவிருக்கின்றன.

வரவிருக்கும் கோடை விடுமுறைகளின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வது சாத்தியமாகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றியத்தின் நாடுகளும், பாராளுமன்றமும் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தினுள் வாழ்பவர்கள் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டுடன் ஒன்றியத்தினுள் பிரயாணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவெடுத்திருக்கின்றன. 

தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டுக்கள் மூன்று விபரங்களைக் கொண்டிருக்கும். தடுப்பு மருந்துகளைப் பெற்றாரா, ஏற்கனவே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிக் குணமானவரா, சமீபத்தில் பரிசீலித்து தொற்றில்லாதவர் என்று அறிந்துகொண்டவரா ஆகியவையே அவையாகும். 

 தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருப்பவர்களை ஒன்றிய நாடுகளுக்குள் பயணிக்க அனுமதிப்பது பற்றி நேற்றுப் புதனன்று ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் முடிவை எடுத்தது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளிரண்டையும் பெற்றுக்கொண்ட ஒன்றியத்தின் குடிமக்கள் அல்லாதோர் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணம் செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

இதுவரை நாட்டின் ஒரு லட்சம் பேருக்கு எத்தனை பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரத்தை வைத்தே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெவ்வேறு பிராந்தியங்களிலிருந்து வருபவர்களைத் தமது நாடுகளுக்குள் அனுமதிக்கலாமா இல்லையா என்று முடிவு செய்துவந்தார்கள். வெவ்வேறு ஐரோப்பிய நாடுகள் அதில் வெவ்வேறு அளவுகளைக் கையாண்டு வந்தன. தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டுக்குப் பின்னர் எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒரே விதமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிகளைக் கையாளவேண்டும் என்பதைச் சில நாடுகள் ஏற்றுக் கொள்ளாததாலேயே இது பற்றிய முடிவெடுப்பது இழுபட்டுக்கொண்டு வந்தது. 

முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டாலும் குறிப்பிட்ட கொரோனாத் தொற்றுக்கள் பற்றிய கடவுச் சீட்டு சகல ஐரோப்பிய நாடுகளாலும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட எவ்வளவு காலமாகும் என்பதில் இதுவரை தெளிவில்லாமலே இருக்கிறது. இவை அனேகமாக ஜூலை மாதத்தின் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரங்களில் தயாராகலாம் என்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *