இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு ஆகக்குறைந்தது 100 மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் வழங்கப்படுமென்று உறுதியளித்தார். தற்போது தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 80 % பணக்கார நாடுகளாலேயே வாங்கப்படுகின்றன.

உலகின் பணக்கார நாடுகள் 20 சந்தித்துக்கொண்ட இந்த மாநாடு ஒரு “தானம் வழங்கும்” போன்று செய்ற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை. ஜேர்மனியும், பிரான்சும் தத்தம் பங்குக்கு 30 மில்லியன் தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்குக்  கொடுப்பதாகக் குறிப்பிட்டன. பைசர் பயோன்டெக், மொடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள் 3.5 பில்லியன் தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு அவைகளின் தயாரிப்புச் செலவு விலைக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கின்றன.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஐ.நா-வின் காரியதரிசி “தற்போதிருக்கும் நிலைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. வறிய நாடுகள் இது போல் மீண்டுமொருமுறை பணக்கார நாடுகளின் தானம் கொடுக்கும் மனப்பான்மையில் தங்கியிருக்கக்கூடாது. எதிர்காலத்தில் அவர்களும் தத்தமக்குத் தேவையான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நிலைமை வரவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

ஆபிரிக்க நாடுகளில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்காக ஒரு பில்லியன் டொலர்கள் ஒழுங்குசெய்யப்படுமென்று உறுதியளிக்கப்பட்டது. தடுப்பு மருந்துகளின் காப்புரிமையைத் தற்காலிகமாக ஒழித்துக்கட்டுவது பற்றியும் பேசப்பட்டது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *