சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.
சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள்.
யெல்லோ ரிவர் ஸ்டோன் பகுதியில் 20 – 31 கி.மீற்றர்களுக்கிடையிலான மிகவும் உயரமான மலைப்பிரதேசத்தில் ஓட்டவீரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. வெப்பநிலை குறைந்ததுடன் பனிக்கட்டிகளும், உறைந்த பனிமழையும் பெய்ய ஆரம்பித்தது. அத்துடன் கடும் குளிர் காற்றும் வீசத் தொடங்கியிருந்தது. அதனால் பங்குபற்றிய வீரர்கள் சிலருடைய உடல்வெப்பநிலையில் ஏற்பட்ட மாறுதலால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
வருடாவருடம் கான்ஸு நகரத்தால் நடாத்தப்படும் அந்தப் போட்டியில் இவ்வருடம் 172 பேர் அந்த ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டிருந்தார்கள். அதில் கடந்த வருடங்களில் வென்றவர்களும், சீனாவின் சில முக்கிய மரதன் ஓட்டப் போட்டியாளர்களும் இருந்தனர். அப்படியான பெயர்பெற்ற வீரர்கள், குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஓட்ட வீரர்கள் சிலரும் இறந்துபோன 21 பேரில் அடக்கம்.
அங்கே காலநிலை திடீரென்று மாறியதைத் தெரிந்துகொண்டதும் உடனடியாக 18 பேர் அடங்கிய மீட்புக் குழுவொன்று அங்கே அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் 100 பேருக்கும் அதிகமானவர்களைக் காப்பாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
கான்ஸு காலநிலை மையத்தினர் அந்தப் பிராந்தியத்துக்காக அறிவித்த வாநிலை அறிக்கையில், குளிர், பனிக்கட்டி மழை,மின்னல் இடியுடன் கூடிய கடும் மழை ஆகியவை சனியன்று இருக்கும் என்று அறிவித்திருந்தது. ஓட்டப்போட்டியை நடாத்திய குழுவினருக்கு அதே காலநிலை மையம் அனுப்பியிருந்த காலநிலை எச்சரிக்கை அறிக்கையில் குளிர், பனி, போன்றவை எவையும் குறிப்பிடப்படவில்லை என்று தெரியவருகிறது.
மங்கோலியாவை அடுத்திருக்கும் கான்ஸு பகுதி சீனாவின் வறிய மாகாணங்களில் ஒன்றாகும். பொதுவாகவே சீனாவில் சமீபத்தில் மரதன் ஓட்டப்பந்தயங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. அவைகளை நகரங்கள் தமது விளம்பரத்துக்காக நடாத்தியும் வருகின்றன. நடந்திருக்கும் இந்த விபத்துக்கான தவறு எங்கேயிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு விசாரணை நடாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்