ஜேம்ஸ் பொண்டுக்கும் பயமில்லாமல் கர்ஜிக்கும் சிங்கத்தை, விழுங்கியது அமெஸான்.
சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மெட்ரோ கோல்ட்வின் மெயர் சினிமா நிறுவனத்தை உலகின் மிக அதிகமான பணமதிப்புள்ள அமெஸான் நிறுவனம் வாங்கியது அறிவிக்கப்பட்டது. இது பொழுதுபோக்குக்கான நேரடி ஒளிபரப்புத் துறைக்குள் நுழைய விரும்பும் அமெஸான் நிறுவனத்தின் குறியின் மிக முக்கியமான நகர்வாகும்.
கொரோனாக்காலத்தில் பல சினிமா நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சமயத்தைப் பெருமளவு வியாபாரத்தில் உயர்ந்திருக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தித் தவித்த முயலை அடிப்பது போன்ற விலைக்கு வாங்கி வருகின்றன. அதே போன்ற ஒரு நகர்வே அமெஸான் நிறுவனத்தின் இந்தக் கொள்முதல் என்று குறிப்பிடப்படுகிறது.
James Bond, Terminator, Stargate, The Hobbit, Rocky, Robocop போன்ற பிரபல சினிமாக்கள் உட்பட 4,000 சினிமாக்களையும், சுமார் 17,000 தொலைக்காட்சிப் பகுதிகளின் உரிமைகளையும் இதன் மூலம் அமெஸான் பெற்றிருக்கிறது. 2020 இல் மட்டும் தனது Prime Video
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்காக பதினொரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்திருக்கும் அமெஸானுக்கு 8.45 பில்லியன் டொலர்கள் பெரும் தொகையல்ல என்பதை ஊகிக்கலாம்.
அமெஸான் நிறுவனம் எம்.ஜி.எம் – ஐ வாங்கியிருப்பதால் மட்டும் அந்தக் கொள்வனவு நிறைவேறிவிட முடியாது. அமெரிக்காவின் நிறுவனங்கள் சந்தையில் அளவுக்கதிகமான பலம் பெற்றுவிடக்கூடாது என்பதில் அமெரிக்க அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. தற்போதைய நிலைமையில் அமெஸான் சினிமா, தொலைக்காட்சித் துறையில் அதிக பலமற்றது என்றாலும் வேறு பல வகைகளிலும் இணையத்தளத்தில் மிகப் பலமானதாக இருக்கிறது. எனவே, இந்தக் கொள்வனவு பற்றிய ஆராய்வு முடிந்த சில மாதங்களின் பின்னரே அமெஸான் தாம் வாங்கிக்கொண்ட எம்.ஜி.எம் இன் உரிமைகளை எப்படியாகப் பாவிக்கலாம் என்பது தெரியவரும்.
சாள்ஸ் ஜெ. போமன்