டென்மார்க்கை ஏமாற்றி, பாவித்து ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டது அமெரிக்கா.
தமது கூட்டுறவு நாடான டென்மார்க்கின் உதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் தமது நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளையே வேவு பார்த்திருக்கிறது NSA எனப்படும் அமெரிக்காவின் உளவுத்துறை. 2012 – 2014 வருடங்களுக்கிடையே நடந்திருக்கும் இந்த அத்துமீறல் மூலம் ஜேர்மனிய, பிரான்ஸ், நோர்வே, சுவீடன் அரசியலில் முக்கிய புள்ளிகளின் தொலைபேசிகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்டிருக்கிறது.
அமெரிக்காவின் உளவுத்துறை பற்றிய பல விபரங்களை எட்வர்ட் ஸ்னௌடன் வெளிப்படுத்தியதன் பின்பு அது தம்மை எந்தளவில் பாதித்திருக்கிறது என்பதை அறிய டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சு தனது உளவுத்துறையின் நடவடிக்கைகளைப் பற்றிய ஆராய்வொண்றை மேற்கொண்டது. அதன் விபரங்களை 2015 இல் டென்மார்க் உளவுத்துறை அறிக்கையாக்கியது. ஆனால், 2020 ம் ஆண்டுவரை அதை டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சருக்கே கையளிக்கவில்லை.
கொப்பன்ஹேகனுக்கு அருகேயிருக்கும் தமது ஒட்டுக்கேட்கும் மையத்தில் செயற்பட டென்மார்க்கின் உளவுத்துறை அமெரிக்க உளவுத்துறைக்கு அனுமதி கொடுத்திருந்தது. அதைப் பயன்படுத்தியே அமெரிக்கா தனக்கும், டென்மார்க்குக்கும் நெருங்கிய நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது.
தம்மிடம் அனுமதியின்றியே அமெரிக்கா நட்பு நாட்டு அரசியல்வாதிகளின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்கிறது என்ற சந்தேகம் டென்மார்க்குக்கு ஏற்கனவே உண்டாகியிருந்தது. ஆனால், அவர்கள் அவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவோ, உறுதிப்படுத்தவோ இல்லை. அவர்களுடைய குறிப்பிட்ட அறிக்கை கொண்டிருக்கும் விபரங்களை பல ஐரோப்பிய ஊடகங்கள் தற்போது தமது வழிகளைப் பாவித்து அறிந்து ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்