இராணுவ ஆட்சியிலிருக்கும் மியான்மாரில் மக்கள் தமது பாதுகாப்புப் படையொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுமார் நான்கு மாதங்களாயிற்று மியான்மார் இராணுவம் தனது நாட்டின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களைக் கைதுசெய்துவிட்டுப் பதவியில் அமர்ந்து. நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தம்மைக் கொடுமைப்படுத்தும் இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது ஆட்சியை எதிர்க்கும், சுமார் 3,300 பேரைக் கைதுசெய்து, சுமார் 730 பேரை வெவ்வேறு வகைகளில் கொன்றழித்த இராணுவமோ தனது குரூரத்தைக் குறைக்கவில்லை.
https://vetrinadai.com/news/myarmed-killed/
மியான்மாரின் சில இனத்தவர்களும் தாம் தாம் ஏற்கனவே உண்டாக்கியிருக்கும் ஆயுதப் படைகள் மூலம் இராணுவத்துடன் கெரில்லாப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். இராணுவ ஆட்சிக்கு எதிராக உண்டாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் நிழல் அரசாங்கம் ஒரு ஆயுதப் படையை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருப்பது ஒரு புதிய நகர்வாகும்.
வெளிநாடுகளில் வாழும் வாழும் மியான்மாரிகளிடையே சேர்க்கபட்ட பணத்தில் அந்த இராணுவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மியான்மாரின் காடுகளுக்குள் போராளிகளுக்குப் பயிற்சிகொடுத்து 100 பேர் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட முதலாவது படையணி தயாராகியிருப்பதாக நிழல் அரசின் தலைவர் வெளியிட்ட உரையொன்று வெளியாகியிருக்கிறது.
வெளிநாடுகளில் சேமிக்கப்படும் நிதி மிகப் பெரிய அளவில் போருக்கான உபகரணங்களை வாங்கவும் மியான்மாரின் இராணுவத்தை எதிர்த்துக் குறிவைத்துத் தாக்க உதவுவதாகவும் பல கோணங்களிலிருந்து வெளியாகியிருகும் செய்திகளிலிருந்து தெரிகிறது. “எமது ஜனநாயகப் போராட்டங்களுக்கு உலக நாடுகளிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கு இனியும் இல்லை. எனவே, எமது மக்களின் போராட்டத்தை நாம் எமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்,” என்று தமது இராணுவத்தின் முதலாவது அணியை அறிமுகம் செய்த நிழல் அரசின் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்