“75 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கும் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றெழ மேலும் பல ஆண்டுகளாகலாம்.”
ஐக்கிய நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி [UNWTO]அமைப்பின் விபரங்களின்படி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 லிருந்து சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 74 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சுமார் ஒரு பில்லியன் பயணிகளைச் சுற்றுலாத்துறை இழந்திருப்பதாகத் தெரிகிறது.
2020 இல் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உலகப் பொருளாதாரம் இழந்திருக்கும் மதிப்பைக் கணக்கிடும்போது அது சுமார் 4 திரில்லியன் டொலர்கள் என்கிறது அறிக்கை. அதன் விளைவால் வறிய மட்டும் வளரும் நாடுகளே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மில்லியன்கள் தொழிலாளர்கள் தமது வருமானத்தை இழந்திருக்கிறார்கள்.
உலக மக்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு நிலைமை சீராகும்வரை சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பில்லை. தற்போது நிலவும் தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் பெரும்பாலான நாடுகளால் சுற்றுலாத்துறையை இயக்கவைக்க முடியாது. அதன் பாதிப்பையும் வறிய, வளரும் நாடுகளே நேரிடும். 2021 இல் சுற்றுலாத்துறையின் ஒரு பகுதி சீர்செய்யப்பட ஆரம்பித்தாலும் இவ்வருட இழப்பின் பெறுமதி 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.5 திரில்லியன் டொலர்களை வரை ஆகலாம்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகின் சில பகுதிகளில் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் சுற்றுலாவில் ஈடுபடலாம் என்ற நிலைமை அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 01 ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் தனது பகுதிக்குள் முடிந்தவரை மக்கள் சுதந்திரமாகப் பயணிக்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபட்டு வருவதுடன் அமெரிக்கப் பயணிகளையும் வரவேற்கத் தயாராகிறது.
வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் இச்சமயத்தில் பல நாடுகளில் உள்நாட்டுச் சுற்றுலாக்களுக்கான மவுசு பெருமளவில் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. ஆனால், அந்த நிலைமை பெரும்பாலான வளரும் நாடுகளில் ஏற்படவில்லை. இந்த நிலைமை மேலும் தொடருமானால் சுமார் 120 மில்லியன் பேர் மேலதிகமாகத் தமது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது ஐ.நா-வின் சுற்றுலாத்துறை அமைப்பு.
சாள்ஸ் ஜெ. போமன்