“ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்,” என்கிறது ஸ்லோவேனியன்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை தாங்கும் நாடு மாற்றப்படும். தலைமை தாங்கும் நாடு தனது ஆறு மாதக் காலத்தில் தாம் விரும்பும் குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றியம் கவனமெடுக்கும்படி செயற்படும். வெவ்வேறு நாடுகளுக்கு, வெவ்வேறு விடயங்கள் முக்கியமாக இருப்பது வழக்கம்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது ஸ்லோவேனியா. அவர்களுடைய ஆறு மாதக் காலத்துக்கு அவர்கள் முக்கியப்படுத்தும் விடயங்களில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வருபவர்கள் பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெறாது என்கிறார் நாட்டின் உள்துறை அமைச்சர் அலெஸ் ஹொய்ஸ்.
கடந்த ஐந்து வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய பிரச்சினையாக விளங்கிவருவது ஒன்றியத்துக்குள் அகதிகளாக வருபவர்கள் பற்றி எவரெவர் பொறுப்பு எடுப்பது என்பதாகும். சில நாடுகள் அப்பொறுப்பை, செலவை சகல ஒன்றிய நாடுகளும் தமக்குள் பிரித்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கின்றன. அதற்கு எதிராகச் செயற்படும் நாடுகளில் ஸ்லோவேனியா முக்கியமான ஒன்றாகும்.
“இன்றைய நிலைமையில் நாம் என்ன செய்ய முடியும் என்றே நாம் யோசிக்க வேண்டும். களவாக எல்லைகளைத் தாண்டி அகதிகளாக வருபவர்களையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களில் பலருக்கு அகதிகளாகும் தேவையில்லை. அவர்களைக் கையாளும் செலவும், நேரமும் மிக நீண்டதாக இருக்கிறது. எனவே, அனுமதியின்றி வருபவர்களை அவரவர் நாடுகளுக்கே திரும்பச் செய்யவேண்டும். ஒன்றிய நாடுகளுக்குள் அகதிகளாக வருபவர்களை எப்படிக் கையாள்வது என்று முடிவு செய்யும் வரை நாம் அந்தப் பிரச்சினையத் தள்ளிவைப்பதே உசிதமானது,” என்கிறார் ஸ்லோவேனியாவின் உள்துறை அமைச்சர்.
சாள்ஸ் ஜெ. போமன்